சுருக்குவலை தொழிலால் வடமராட்சி கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

57 0

வடமராட்சி கிழக்கில் இடம் பெறும் சுருக்கு வலை தொழிலால் வடமராட்சியிலிருந்து காங்கேசன் துறை கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் கடற்றொழில் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் வடமாகாண மீனவர் அமைப்பு பிரதிநிதியும் முன்னாள் யாழ் மாவட்ட சம்மேளன தலைவருமான அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்றையதினம் (17.06.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இங்கு முன்னாள் சம்மேளன உப தலைவரும், முன்னாள் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் மற்றும் கடற்றொழில் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

பருத்தித்துறை பிரதேசத்தில் கடந்த வாரத்திலே மீண்டும் சுருக்குவலை தொழில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டதனால் இந்த பிரதேச தொழிலாளர்கள் மிகமிக வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் அங்கே சுருக்குவலை தொழிலில் சட்டவிரோதமாக ஈடுபடும்போது ஆயிரக்கணக்கான மீன்களை சுருக்குவலை மூலம் பிடிப்பதனால் அந்த பகுதியிலே இருந்து வருகின்ற மீன்களின் வருகை குறைவதனால் இவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பிரதேசத்தில் கடற்றொழிலாளர்கள் சூடைத் தொழிலில் ஈடுபடும் போது குறிப்பிடத்தக்க சூடைகளை பிடித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை ஈட்டக் கூடிய ஒரு சூழ்நிலை இருந்தது.ஆனால் மீண்டும் செவ்வாய் புதன் வியாழன் ஆகிய தினங்களில் இந்த சுருக்குவலை தொழில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.