இலக்கு நிர்ணயித்த காலத்தில் திட்டங்களை செயல்படுத்துங்கள்!

61 0

பருவமழை போன்ற இடர்ப்பாடுகள் வருவதற்கு முன்பு, இலக்கு நிர்ணயித்த காலத்தில் திட்டங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் முத்திரை திட்டங்கள் குறித்த முதல்கட்ட ஆய்வு கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

இதில் முதல்வர் பேசியதாவது: பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் செயலாக்கத்தில் காணப்படும் சில சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து விவாதித்துள்ளோம். இதுபோன்ற ஆய்வு கூட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் நடத்தி,பல்வேறு துறைகளிலும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக அடையாளம் காணப்பட்ட, அதிக நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ‘அரசின் முத்திரை திட்டங்கள்’ என வகைப்படுத்தியுள்ளோம். இந்த திட்டங்களை விரைந்து முடிக்க உங்கள் அனைவரையும் ஏற்கெனவே கேட்டுக் கொண்டேன்.

இதன் 2-ம் கட்டமாக, அந்த திட்டங்களோடு மேலும் பல புதிய திட்டங்களையும் இணைத்து, தற்போது 11 துறைகளுக்கான ஆய்வு கூட்டம் நடந்துள்ளது.

கடந்த ஆய்வு கூட்டத்துடன் ஒப்பிடும்போது, பெரும்பான்மை திட்டங்களில் சிறப்பான முன்னேற்றம் இருந்தாலும், சில திட்டங்களில் கவனம் தேவைப்படுகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் திட்டங்கள், எதிர்பார்த்த காலகட்டத்துக்கு முன்பே செயலாக்கத்துக்கு வந்துவிடும். சென்னை கிண்டியில் கடந்த 15-ம் தேதி திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்புமருத்துவமனை, மதுரை மாநகரில் விரைவில் திறப்பு விழாவை எதிர்நோக்கி உள்ள கலைஞர் நினைவு நூலகம் போன்ற திட்டங்களே இதற்கு உதாரணம்.

இதுபோன்ற நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றின் செயலாக்கத்தை நான் தொடர்ந்து உங்களுடன் விவாதித்ததால், தமிழகம் இன்று தேசிய அளவில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. தேசிய அளவில் முதல் இடம் பெறுவது மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் தலைசிறந்து விளங்க வேண்டும் என்பதே நம் இலக்கு.

இத்திட்டங்கள் விரைவாக முடிக்கப்படாவிட்டால், மிக விரைவில் வரவுள்ள பருவமழை போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் அத்திட்டங்களின் முன்னேற்றம் பாதிக்கப்படும். பருவமழைக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றால், அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிகள் போன்றசூழல்களால் பணிகளின் முன்னேற்றம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே, சரியான திட்டமிடுதலுடனும், உரிய வழிகாட்டுதலுடனும் திட்டங்களை நீங்கள் அணுகவேண்டும். இன்னும் 2 மாதங்களில்அடுத்த ஆய்வு கூட்டம் நடைபெறும்போது, நாம் விவாதித்த பெரும்பாலான திட்டங்களில், சிறப்பான முன்னேற்றம் காணப்படும் என நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இக்கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலர் இறையன்பு, பல்வேறு துறைகளின் செயலர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.