ஒலி / ஒளிபரப்பு சட்டமூலத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்கிறார் ஜனாதிபதி ரணில்

144 0

குற்றவியல் அவதூறு சட்டத்தினை நீக்கிய நான் ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயற்படப்போவதில்லை.

பாதுகாக்கப்பட்ட கருத்துரிமையை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் எதற்காக முன்னெடுக்கப்படுகின்றன? இந்த முறைமையைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பிரதேச செயலக அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இணைய முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ,

முன்னேறிய நாடாக நாம் பயணிப்பதற்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியமானது. அதன் முதல் அத்தியாயத்தை தற்போது ஆரம்பித்துள்ளோம்.

இந்த நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்றுள்ளதால் , ஊடகவியலாளர் இங்கு வந்து ‘ஊடக அமைச்சர் ஊடகங்களை அழிக்கப் போகிறார், தென்கொரியாவை போன்ற நிலைமையை உருவாக்க போகிறார்’ என எதிர்ப்பு போராட்டம் செய்வார்கள் என நினைத்தேன்.

ஊடகங்கள் ஏன் இவ்வாறு செயற்படுகின்றன என எனக்குத் தெரியவில்லை. தண்டனைச் சட்டக்கோவையில் குற்றவியல் அவதூறுச் சட்டம் காணப்பட்டது.

நானே அதனை நீக்கினேன். ஆசிய வலயத்தின் எந்தவொரு நாடும் அதனை நீக்கியிருக்கும் என நான் நினைக்கவில்லை.

இவ்வாறிருக்க பாதுகாக்கப்பட்ட கருத்துரிமையை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் எதற்காக முன்னெடுக்கப்படுகின்றன.

எவருக்கும் அதனை நீக்குவதற்கான அவசியமில்லை.  இங்குள்ள அனைவரையும் விட ஊடகங்களுடன் நெருக்கமான தொடர்பு எனக்கு உள்ளது. அதனால் கருத்துரிமையை பறிக்கும் நோக்கம் எவருக்கும் இல்லை.

இங்குள்ள பிரச்சினை மாறுபட்டதாகும். ஊடகங்களால் அநீதி ஏற்படும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தினை சகல நாடுகளும் கொண்டுள்ளன.

இங்கு அரச ஊழியர்கள் இருக்கின்றனர்.  இவர்களின் எத்தனை பேருக்கு இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக அவதூறு ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

சில நேரங்களில் இலத்திரனியல் ஊடகங்கள் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுகின்றன. இதனால் அவர்களுக்கு கிடைக்கப்போகும் நிவாரணம் என்ன, பொது மக்களுக்கு மாத்திரமின்றி எனக்கும் அந்த பிரச்சினை உள்ளது.

ஒலிபரப்பு உரிமங்களை இரத்து செய்யும் அதிகாரம் அமைச்சருக்கு தற்போதும் உள்ளது. எவரும் நீதிமன்றத்திற்குச் சென்று நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்பை இந்தச் சட்டம் முன்மொழிகிறது.

நீதிமன்றத்திற்கு செல்லும் பிரேரணைக்கு எதிராக இருந்தால் அந்த அதிகாரத்தை அமைச்சரிடம் வைத்திருக்கச் சொல்லுங்கள். இதை ஒரு பொறிமுறைக்கு ஏற்ப முன்னோக்கிக் கொண்டு செல்லவே நாம் முயற்சிக்கிறோம்.

இந்த முறைமைக்கு யாரும் பயப்பட வேண்டாம். இலத்திரனியல் ஊடகங்கள் எனது வீட்டை எரித்தது மட்டுமல்லாமல் பெறுமதிமிக்க சுமார் 3000 புத்தகங்களும் அழிந்தன. அது எனக்கு ஏற்பட்ட நட்டம். இப்போது, வீடுகளை எரிக்கும் அனுமதிப் பத்திரம் வேண்டும் என்றா கேட்கிறார்கள்? என்றார்.