டிரம்பின் புதிய உத்தரவுக்கு உடனடி தடை இல்லை: அமெரிக்க கோர்ட்டு கைவிரிப்பு

213 0

6 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து டிரம்ப் பிறப்பித்துள்ள புதிய உத்தரவுக்கு தடை விதிக்க அமெரிக்க கோர்ட்டு மறுத்து விட்டது.

6 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து டிரம்ப் பிறப்பித்துள்ள புதிய உத்தரவுக்கு தடை விதிக்க அமெரிக்க கோர்ட்டு மறுத்து விட்டது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு 3 மாத கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இது அமெரிக்கா மட்டுமல்லாது சர்வதேச அளவில் பெரும் போராட்டங்களுக்கு வழி வகுத்தது. இதற்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

சியாட்டில் மத்திய கோர்ட்டு நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட், டிரம்பின் உத்தரவுக்கு நாடு முழுவதும் தடை விதித்தார். இதை டிரம்ப் கடுமையாக சாடினார்.இதற்கிடையே பயண தடை விதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இருந்து ஈராக்கை விலக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகத்துக்கு உள்நாட்டில் கோரிக்கை வலுத்தது.

இந்த நிலையில் டிரம்ப், கடந்த சில தினங்களுக்கு முன் புதிய பயண தடை உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டார். இந்த பயண தடை ஆணையில், ஈராக் தப்பியது. முதலில் தடை விதிக்கப்பட்ட பிற 6 நாடுகளும் தடை பட்டியலில் தொடர்கின்றன. இந்த புதிய தடை உத்தரவு, வரும் 16-ந் தேதி அமலுக்கு வருகிறது. குடியுரிமை பெற்றவர்கள் (கிரீன்கார்டுதாரர்கள்), செல்லத்தக்க விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த பயண தடையில் இருந்து விலக்கு கிடைத்துள்ளது.

இருந்தபோதிலும் டிரம்பின் புதிய பயண தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன. கோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்படுகின்றன.

இந்த நிலையில் டிரம்பின் புதிய பயண தடை உத்தரவுக்கு தடை கேட்டு சியாட்டில் மத்திய கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வாஷிங்டன் மாகாண வக்கீல்கள், நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட்டிடம், “நீங்கள் முன்பு பிறப்பித்த தேசிய தடை உத்தரவை, புதிய தடை உத்தரவுக்கும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று கேட்டு வாதாடினார்கள்.

ஆனால் அந்த வாதத்தை நீதிபதி ஜேம்ஸ் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். புதிய பயண தடை உத்தரவுக்கு உடனடி தடை விதிக்க முடியாது என அவர் கூறிவிட்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “நடைமுறை காரணங்களால் அப்படி செய்ய முடியாது” என கூறி விட்டார்.மேலும் இது தொடர்பான விரிவான ஆவணங்களை வக்கீல்கள் தாக்க செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.டிரம்பின் புதிய பயண தடை உத்தரவுக்கு சியாட்டில் கோர்ட்டு தடை விதிக்க மறுத்திருப்பது, அமெரிக்க அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.