விமானங்களில் இடம் போதாமல் பக்கத்துக்கு இருக்கைக்காரருடன் முறைத்துக்கொண்டே செல்லும் பயணிகள், காலைத் தூக்கி முன்னாலிருக்கும் இருக்கையில் வைத்துக்கொள்ளும் பயணிகளைக் குறித்தெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதிக வசதி படைத்தவர்களுக்கென விமானங்களில் தன் இடம் உள்ளது. அவர்கள் சொகுசாக பயணிக்கலாம். மற்றபடி வசதி குறைந்தவர்கள் பேருந்திலோ ரயிலிலோ நெருக்கியடித்துக்கொண்டு உட்காருவதைபோலத்தான் சில விமானப்பயணங்களும் உள்ளன.
என்ன வித்தியாசமென்றால், விமானத்தில் நின்றுகொண்டு பயணிக்கமுடியாது அவ்வளவுதான். மொத்தத்தில் பிரச்சினை, இடப்பற்றாக்குறை.

இடப்பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொள்ள ஒரு தீர்வு
ஆக, மக்கள் இப்படி இடப்பற்றாக்குறை பிரச்சினையால் தவிப்பதால், அதற்கொரு தீர்வு காணும் வகையில் Alejandro Nez Vicente என்பவர் டபுள் டெக்கர் விமான இருக்கைகள் என்னும் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளார்.
ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற தொழில் பொருட்காட்சி ஒன்றில் மாதிரி டபுள் டெக்கர் விமான இருக்கைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
விடயம் என்னவென்றால், வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டத்துக்கு பெரும் எதிர்ப்பும் காணப்படுகிறது. அதாவது, ஏதாவது பிரச்சினை என்றால் குறிப்பிட்ட நேரத்துக்குள் பயணிகளை விமானத்திலிருந்து வெளியேற சொல்வார்கள். இப்படிப்பட்ட இருக்கைகளில் காலை நீட்டி அமர்ந்துகொண்டால் எப்படி உடனே வெளியே வருவது என்கிறார்கள் சிலர்.
வேறு சிலரோ, மேலே உட்கார்ந்திருப்பவருக்கு வாயுத்தொல்லை இருந்தால், அவ்வளவுதான் கீழே இருப்பவர் நிலைமை மோசம் என்கிறார்கள்!

