ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பை மாற்ற நடவடிக்கை

163 0

நாட்டுக்கு பலம் மிக்க தலைமைத்துவத்தை வழங்கும் பிரதான நடவடிக்கையாக ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

காலி ஹபராதுவ ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அதிகார சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டுக்கு பலம் மிக்க தலைமைத்துவத்தை வழங்கும் பிரதான நடவடிக்கையாக ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பை மாற்றுவதற்கு எதிர்பார்க்கிறோம். எதிர்வரும் ஜூலை மாதத்தில் கட்சி சம்மேளனத்தை கூட்டி, இது தொடர்பாக கலந்துரையாடி யாப்பை மாற்ற இருக்கிறோம்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பை மாற்றியதன் பின்னர் நாட்டில் அரசியலமைப்பையும் மாற்ற வேண்டும்.  ஏனெனில், பொருளாதார ரீதியில் வீழ்ந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதாக இருந்தால் பலம் மிக்க கட்சி யாப்பு மற்றும் அரசியல் அமைப்பு தேவையாகும்.

1987ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் யாப்புக்கு முரணான வகையில் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பெறுபேறாக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சி அதிகாரம் இல்லாமல் போனது.

விருப்பு வாக்கு முறைமையை அறிமுகப்படுத்தியது ஜே.ஆர். ஜயவர்தனவே என சிலர் அறியாமல் தெரிவித்து வருகின்றனர். அது பிழையான கருத்தாகும். மாறாக, விருப்பு வாக்கு முறையை அறிமுகப்படுத்தியது முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவே என்றார்.