எழுச்சிக்குயில் 2023 தமிழீழ எழுச்சிப்பாடற் போட்டி -சுவிஸ்.

426 0

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாக தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் நடத்திய
எழுச்சிக்குயில் 2023 தமிழீழ எழுச்சிப்பாடற் போட்டி.

கடந்த மே மாதம் 27, 28 சனி, ஞாயிறு இருநாள்களும் சொலத்தூண் மாநிலத்தில் நடைபெற்ற எழுச்சிக்குயில் 2023 போட்டியில் எண்பத்து மூன்று போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள். எட்டாவது தடவையாக நடைபெற்ற இப்போட்டியின் சிறப்பாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த கலைஞர்களுள் தமிழீழத் தேசிய மாவீரர் பணிமனை சுவிஸினால் சேகரிக்கப்பெற்ற 62 கலைஞர்களின் திருவுருவப் படங்கள் வடிவமைக்கப்பெற்று அரங்கிலே வைக்கப்பெற்று வணக்கம் செலுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த கலைஞர்களுக்காகப் பாடல் ஒன்றும் உருவாக்கப்பெற்று வெளியிடப்பெற்றது. தமிழீழத்தின் தேசியக்கொடி, தேசியச்சின்னங்கள், சுடரேற்றப்பெற்ற கலைஞர்களின் திருவுருவப் படங்கள் என அரங்கம் எழுச்சியுடன் காணப்பட்டது. அரங்கிலே அடுக்கப்பெற்றிருந்த தமிழீழத் தேசியத்தலைவர், தமிழீழத் தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பெற்ற பரிசில்கள் எல்லோர் மனங்களையும் ஈர்த்தன.

காந்தள், செண்பகம், வாகை, சிறுத்தை, வளர்ந்தோர், இணை என ஆறு பிரிவுகளாகப் போட்டி நடபெற்றது. இணை பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற எழுவர் தெரிவுசெய்யப்பெற்று எழுச்சிக்குயில் விருதுக்கான போட்டி நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் தொடக்க காலம் முதல் இன்றுவரை வெளியாகிய பாடல்கள் போட்டியாளர்களால் பாடப்பெற்றன. சுவிஸ் நாட்டில் பிறந்து வளர்ந்த இளையவர்கள் இப்பாடல்களை உள்வாங்கிப் பாடிய விதமும் உணர்வு மிக்க வெளிப்பாடும் புளகாங்கிதம் கொண்டு பாராட்டப்பெறவேண்டியவை.

போட்டியில் ஆர்வத்துடன் பங்குபற்றிய போட்டியாளர்கள், அவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்கள், பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகள். யேர்மனி, பிரான்ஸ் நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த நடுவர்களுக்கும் பின்னணி இசை வழங்கிய இசைக்கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நிகழ்வு சிறப்புற உறுதுணை புரிந்த செயற்பாட்டாளர்கள், உணர்வாளர்கள் மற்றும் நிதி ஆதரவினை வழங்கிய வணிகப் பெருமக்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பங்குபற்றிய அனைத்துப் போட்டியாளர்களையும் மனதார வாழ்த்துகிறோம். அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் எழுச்சிக்குயில் 2023 விருதினைத் தனதாக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியச் சின்னம் பொறிக்கப்பெற்ற தங்கப்பதக்கத்தை வென்ற சிவதாஸ் சிறீஜன் அவர்களுக்கும் எமது பாராட்டுகள். உங்களுடைய கலையாற்றலை மென்மேலும் வளர்த்துக் கொள்வதோடு அதன் ஊடாகத் தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்க உழைக்க வேண்டும் என்றும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.