தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள துறைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

65 0

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தொடர்புடைய துறைகள் பேரிடர் மேலாண்மை திட்டத்தை தயாரித்து, அதன் அடிப்படையில், உரிய அலுவலர்களை நியமிப்பதுடன், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தலைமைச்செயலர் இறையன்பு தலைமையில் உயர் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று காலை நடைபெற்றது.

துறை அதிகாரிகள் பங்கேற்பு: இக்கூட்டத்தில் பங்கேற்ற, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் கே.பாலச்சந்திரன், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் மழைப்பொழிவு இயல்பாகவே இருக்கும் என்று தெரிவித்தார். வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், தென்மேற்குப் பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, பல்வேறு துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள், மத்திய அரசுத் துறை அலுவலர்கள், தென்மேற்குப் பருவமழையை திறம்பட எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்தனர்.

வடிகால் தூர்வாரும் பணி:

கூட்டத்தில் தலைமைச் செயலர் வழங்கிய அறிவுறுத்தல்: சென்னை மாநகராட்சி பகுதிகளில், மழை நீர் தேங்காத வண்ணம் அனைத்து மழை நீர் வடிகால்களில் தூர்வாரும் பணி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அனைத்து சுரங்கப் பாதைகளும் ஆய்வு செய்யப்பட்டு, வடிகால்கள் தூர் வாரப்பட வேண்டும். மேலும், சுரங்கப் பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள சென்சார்கள் சரியாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். தானியங்கி மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். கடந்தாண்டு வழங்கப்பட்டதுபோல் முன்னெச்சரிக்கை செய்திகளை போக்குவரத்து காவல்துறை இந்தாண்டும் வழங்க வேண்டும்.

தரைப்பாலங்களில் வெள்ள நீர் சென்றால், மாற்றுப்பாதை ஏற்பாடு செய்வதுடன், தரைப்பாலங்கள், ஆபத்தான நீர்நிலைகளில் பொதுமக்கள் செல்ஃபி எடுப்பதை காவல்துறையினர் தடுக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மழை நீர் வடிகால் பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். குறுகலாக உள்ள ரயில்வே பாலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் தூர்வாருவதுடன், தண்ணீரை அகற்ற தானியங்கி மோட்டார் பம்புகளை அமைக்க வேண்டும்.

தயார் நிலையில் உபகரணங்கள்: பலவீனமாக உள்ள கட்டிடங்களை கண்டறிந்து, பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.அணை நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொடர்புடைய துறைகள் பேரிடர் மேலாண்மை திட்டத்தை தயாரித்து, அதன் அடிப்படையில், பேரிடர்களை திறம்படஎதிர்கொள்ள உரிய அலுவலர்களை நியமித்து, தேவையான அனைத்து உபகரணங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். அத்துடன் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.