225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு 44 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள்

69 0
225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக 44 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு பொலிஸ் அதிகாரிகள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரட்சி  முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2022.05.09 மே காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது தமது கடமைகளை செயற்படுத்த தவறிய 69 பொலிஸ் பிரிவுகளில் சேவையாற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொலிஸ் திணைக்களம் ஊடாக விசாரணை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் சம்பவத்தை முன்னிலைப்படுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 38 பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய தரப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

காலி முகத்திடல் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறையால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமாதிபர் திணைக்களம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

இதன்போது எழுந்து மேலதிக கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார பிரபுக்கள் பாதுகாப்புக்காக 44 ஆயிரம் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

225 பாராளுமன்ற உறுப்பினர்களே அந்த பிரபுக்கள் என அண்மையில் செய்தி வெளியாகியுள்ளன. இவ்வாறான செய்திகளால் தான் மக்கள் அரசியல்வாதிகளை வெறுக்கிறார்கள். ஆகவே இந்த செய்தியின் உண்மை தன்மை என்னவென்று வினவினார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாக்கு அமைச்சர் டிரான் அலஸ் 44 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அடிப்படையற்றதாகும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு பொலிஸ் அதிகாரிகள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு சேவை வழங்கப்படுகிறது என்றார்.