மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை (8) கொழும்பில் இருந்து வருகை தந்த புவிச்சரிதவியல் சுரங்க பணியக திணைக்கள அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து வருகை தந்த புவிச்சரிதவியல் சுரங்க பணியக திணைக்கள அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட புவிச்சரிதவியல் சுரங்க பணியக அதிகாரிகளும் இணைந்து பார்வையிட்டனர்.
இதன்போது தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்தமை தெரிய வந்துள்ளது.
இதன்போது குறித்த தேத்தாவடி பகுதியில் அனுமதிப்பத்திரம் உள்ள இடங்களில் அகழப்படும் மண் களஞ்சியப்படுத்தும் இடங்களில், சட்ட விரோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்ட மண்ணையும் சேர்ந்து களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யப் படுகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 10 உழவு இயந்திரங்கள்,3 ஜே.சி.பி(J.C.P) இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்பைக்கடவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இவை அனைத்துக்குமான அனுமதிப்பத்திரங்களை தற்காலிகமாக இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பாதுகாப்பு பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெற்றுள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ள நிலையில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            