முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்கள் விடுவிப்பு

71 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள 29 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது. மேலும் 19 ஆயிரம் ஏக்கர் காணிகள்விடுவிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத்திணைக்களத்தின் காணி விடுவிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,முல்லைத்தீவு மாவட்டத்தில் போர் தொடங்க முன்பு 1985 ஆண்டு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 வீதமான காடுகள் காணப்பட்ட போர் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட நிலம் போர் காரணமாக அந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த காரணத்தினால் அந்த காணிகள் காடுகளாக உருமாற்றம் பெற்றிருந்தது.

காடுகளை கொண்ட காணிகள் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கூகிள் வலையமைப்பினையும் ஜி.பி.எஸ் புள்ளியினையும் பயன்படுத்தி காடுகளாக காணப்பட்ட அத்தனை நிலங்களையும் ஒதுக்கு காடுகளாக பிரகடனம் செய்தார்கள்.இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த காடுகளின் வீதம் 68 வீதமாக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.

29 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தற்போது பொதுமக்களால் துப்பரவு செய்யப்பட்டு விவசாய நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஏனைய நிலங்களாக முத்தையன்கட்டு குளம், நித்திகைகுளம், தண்ணிமுறிப்புகுளம், வவுனிக்குளம், அம்பலவன்பொருமாள்குளம், ஜயம்பெருமாள்குளம், மருதங்குளம் என பாரிய நீர்பாசன குளங்களுடன் ஒட்டிய 19 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியிருக்கின்றது.இவை போர் காலத்திற்கு முன்னர் மக்களால் பயன்படுத்தப்பட்டு போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த காரணத்தினால் காடுகளாக உருமாற்றம் பெற்றுள்ளது. இதற்குகள் வடிகால் அமைப்பு தொகுதிகள் கட்டுமானங்கள் எல்லாம் உள்ளடங்கியுள்ளது. இவற்றை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது காடுகளாக உருமாற்றம் பெற்றுள்ளதால் அவற்றை விடுவிப்பதற்கு ஜனாதிபதியின் செயலாளர் தலைவரை உள்ள தேசிய குழு விற்கு போடப்பட்டுள்ளது. அவர்களின் தீர்மானத்தின் பின்னர் தான் விடுவிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பார்கள்.

இவ்வாறான 19 ஆயிரம் ஏக்கர் கொண்ட நிலங்கள் விடுவிக்கப்படும் இடத்தில் முல்லைத்தீவு மாவட்ட உணவு உற்பத்தியினை மேலும் அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.