ஜயசுந்தர,கப்ரால்,பஷிலுக்கு பொருளாதார பாதிப்பில்லை : நடுத்தர மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்

49 0

பொருளாதார பாதிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பி.பி.ஜயசுந்தர, கப்ரால், பஷில் ஆகியோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை அவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற தேவையில்லாத நடுத்தர மக்களே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் இதுவே உண்மை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற  சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட இலங்கையின் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது  உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் பலம் அந்த நாட்டின் தேசிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளிலேயே தங்கியுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்கள் இவ்வாறு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதாக அன்றி வேறு நோக்கங்களை கொண்டதாக அமைந்துள்ளன.

அரசியல் தரப்பினர் எடுத்த தவறான தீர்மானங்களினால் தேசிய உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய வேண்டும்.

அனைத்து துறைகளினதும் ஆரம்பம் சிறிய அளவில் இருந்தே தொடங்கி பெரிய வியாபாரமாக விரிவடைகின்றது. அவ்வாறான வியாபாரம் வீழ்ச்சியடைந்தால் மீண்டும் எழுவது இலகுவானது அல்ல.

ஆனால் அந்த துறைகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை பார்த்தால் மீண்டெழ முடியாத நிலைமை காணப்படுகின்றது.

சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் பொருளாதாரா ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக லீசிங் முறையில் வாகனங்களை கொள்வனவு செய்திருந்தால் தற்போதைய நிலைமையில் அந்த வாகனங்களை லீசிங் நிறுவனங்கள் கையகப்படுத்துகின்றன.

அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். அத்துடன் வங்கிகளுடன் கடன்களை பெற்றிருப்பர். பொருளாதார நிலைமைகளால் அவர்கள் எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்காது போகலாம்.

வங்கிகளில் கடன்பெற்றவர்கள் அதிக வட்டியில் எவ்வாறு தவணைகளை செலுத்த முடியும். 30 சதவீதம் வரையில் வட்டியை செலுத்தும் நிலைமை ஏற்படுகின்றது.

மிகவும் கஸ்டப்பட்டு வியாபாரத்தை கட்டியெழுப்பியவர்கள் அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளால் வியாபாரத்தில் வீழ்ச்சியடையும் நிலைமை ஏற்படுகின்றது.

இப்படி இருந்தால் எவ்வாறு அவர்களால் மீண்டெழ முடியும். இதனால் இது தொடர்பில் துரித தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

இதேவேளை இறக்குமதி கட்டுப்பாடுகளை   தளர்த்தும்  போது தேசிய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படலாம். இதனால் இது தொடர்பில் அவதானம் செலுத்தியே தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அத்துடன் தேசிய உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை காரணிகளால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு நாடு வங்குரோத்து நிலைக்கு செல்லவில்லை.கடந்த அரசாங்கம் எடுத்த தன்னிச்சையான தவறான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.

பொருளாதார பாதிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர,மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் நிதியமைச்சர்  பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு பொருளாதார பாதிப்பு தாக்கம் செலுத்தவில்லை அவர்கள் சுகபோகமாகவே வாழ்கிறார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற தேவையில்லாத நடுத்தர மக்கள் தான் பொருளாதார பாதிப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இதுவே உண்மை என்றார்.