சபையின் செயற்பாடுகளை அமைதியாக முன்னெடுக்க இடமளியோம் – விமல் வீரவன்ச

217 0

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் உள்ள 51 உறுப்பினர்களின் உரிமையை வழங்காவிட்டால் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை அமைதியான முறையில் முன்னெடுத்துச் செல்ல இடமளிக்கப்படாதென ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்தார். தம்மை சுயாதீன குழுவாக அங்கீகரிப்பது சட்டத்தை மீறும் செயற்பாடாயின் அதனை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதாவும், இதற்குக் காணப்படும் உரிமையை ஒடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அனுமதியுடன், கருத்துத் தெரிவித்தபோதே விமல் வீரவன்ச இதனைக் கூறினார். தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களையும் தனியான குழுவாக அங்கீகரிப்பதை கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது பரந்துபட்ட அரசியல் கூட்டணி. இதில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் மாத்திரமே இணைந்துள்ளன. ஐ.ம.சு.முவும், ஐ.தே.கவும் தேசிய அரசுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. எனவே, ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் சு.க தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கும் தேசிய அரசாங்கத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

48 இலட்சம் வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்ற 51 உறுப்பினர்கள் ஒரு கொடியை கையில் ஏந்தியவாறு எதிரணியில் ஒன்றாக இருக்கின்றோம். வாக்களித்த 48 இலட்சம் மக்களின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான உரிமையை வழங்குங்கள். அது மாத்திரமன்றி ஐ.ம.சு.முவில் இணைந்து ஜே.வி.பி போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு வந்தபோது, ஜே.வி.பியினர் கூட்டணியிலிருந்து விலகி எதிர்க்கட்சிக்குச் சென்றனர். அவர்களை தனியான குழுவாக அப்போதிருந்த சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.

எந்தவொரு உறுப்பினர் எந்தக் கட்சியில் எந்தச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தாலும் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு அமைய அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காக அவர்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்குக் காணப்படும் உரிமையை இல்லாமலாக்க வேண்டாம். அவ்வாறு உறுப்பினர்களின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கான உரிமையை ஏற்றுக் கொள்வதாயின், தமது நிலைப்பாட்டின் படி செயற்படுவதற்கான அனுமதியையும் வழங்க வேண்டும்.

நீங்கள் கூறும் சகலவற்றையும் ஏற்றுக் கொண்டு அதன்படி செயற்படுவதற்காக நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நாளாந்தம் கிடைக்கும் 2500 ரூபா கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதற்கோ அல்லது பாராளுமன்ற சிற்றுண்டிச் சாலையில் உணவருந்தி விட்டுச் செல்வதற்கோ நாம் இங்கு வருவதில்லை. மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் அவர்களின் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கே வருகின்றோம்.

நாம் ஜே.வி.பியிலிருந்து விலகி செயற்படுவதாக அறிவித்தபோது அப்போதிருந்த சபாநாயகர் லொக்குபண்டார அதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தார். இவ்வாறான நிலையில் நீங்கள் முன்னாள் சபாநாயகர்களின் தீர்ப்புக்களையே வழிகாட்டலாகக் கொள்ளவேண்டுமே தவிர நிமல் சிறிபலா.டி.சில்வாவினதோ அல்லது அமரவீரவினதோ கடிதங்களை அல்ல. அந்தப் பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்வதற்கு இடமளியுங்கள்.

எம்மை நீங்கள் சுயாதீனக் குழுவாக ஏற்றுக் கொள்வது சட்டத்தை மீறுவதாக இருந்தால் நீதிமன்றம் செல்ல முடியும். எமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு காணப்படும் உரிமையை கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க வேண்டாம். பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரில் 51 உறுப்பினர்களின் உரிமைக்கும், தேசிய சுதந்திர முன்னணியில் உள்ள ஐந்து உறுப்பினர்களின் உரிமைக்கு இடமளிக்காவிட்டால் சபையின் செயற்பாடுகளை அமைதியாக கொண்டு செல்ல இடமளிக்கப்படாது என்றார்.

காய்ச்சல் காரர் தண்ணீர் கேட்பது போல சுமார் 2 வருடங்களாக எமது கருத்தை, அதாவது நாட்டிலுள்ள மக்களின் உண்மையான பிரச்சினைகளை கலந்துரையாடல்களுக்கு எடுப்பதற்கான உரிமை மற்றும் சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரிவருகிறோம்.

ஐ.ம.சு.முவுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் 15 வீதமான நேரம் ஒன்றிணைந்த எதிரணிக்கு வழங்கப்படுவதால், எம்பி ஒருவருக்கு சுமார் 10 நிமிடங்கள் மாத்திரமே கிடைக்கின்றன. சபை ஒத்திவைப்பு பிரேரணை மீது விவாதிப்பதற்கு எமக்குக் கிடைக்கும் நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்துள்ள எதிர்க்கட்சி ஜெனீவாவில் நாட்டுக்கு ஏற்படும் அநீதி, புலனாய்வு அதிகாரிகளை சிறையில் அடைக்கும் பிரச்சினை உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் பற்றி வாய் திறப்பதில்லை. தினேஷ் குணவர்த்தன எம்பியை வெளியேற்றும் பிரேரணைக்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள எதிர்க்கட்சியொன்று ஆதரவாக வாக்களிக்கிறது, மற்றைய கட்சி அதிலிருந்து விலகிக் கொண்டது. அரசாங்கத்துடன் இணைந்துள்ள எதிர்க்கட்சிக்குக் கொடுத்திருக்கும் சலுகைகள் ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள 50 உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவில்லை என்பது இதிலிருந்து புலனாகிறது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, கூட்டில் இருக்க வேண்டிய கிளி மரத்திலும், மரத்தில் இருக்கவேண்டிய குரங்கு கூட்டுக்குள்ளும் இருப்பதுபோது தற்போதைய எதிர்க்கட்சி காணப்படுவதாக டலஸ் அழகப்பெரும எம்பி விமர்சித்தார். எனவே, உண்மையான எதிர்க்கட்சியினர் என்ற வகையில் தமக்கான உரிமையை சபாநாயகர் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.