முல்லைத்தீவில் விவசாயிகள் பயன்படுத்தும் வீதிகள் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்

68 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகள் பெரிதும் பயன்படுத்தும் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

அதேபோன்று ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைய, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் நெல்லை சாதாரண விலையில் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சார்ள்ஸ் நிர்மலாதன் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் தொடர்ந்து பதிலளிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று  பிரதேச செயலாளர் பிரிவில் கொக்குத்தொடுவாயில் இருந்து திருகோணமலை மாவட்டத்தின் தென்னைமரவாடி வரை செல்லும் சுமார் 15 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வீதி, விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதையும், அந்த வீதி பெரிதும் சேதமடைந்துள்ளமை தொடர்பிலும் நாம் அறிவோம்.

அந்த வகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மூன்று பாலங்கள் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டபோதும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், விவசாய அமைச்சு மேற்படி வீதிகளை விரைவாக அபிவிருத்தி செய்து தருமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோன்று நெல் கொள்வனவு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. சபையில் குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுக்கு அமைய, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதாரண விலையில் நெல் சந்தைப்படுத்தும் சபை மூலம் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருகிறது என்றார்.