கட்சியின் அபரிமிதமான வளர்ச்சியை முடக்குவதே கட்டவிழ்த்துவிடப்படும் அச்சுறுத்தல்களின் நோக்கம்

107 0

தமது கட்சியின் தவிர்க்கமுடியாததும், அபரிமிதமானதுமான வளர்ச்சியை முடக்கும் நோக்கிலேயே தம்மை அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாகச் சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதனூடாக இளைஞர்கள் கட்சியின் செயற்பாட்டு வேலைத்திட்டங்களில் பங்கெடுப்பதைத் தடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அரச புலனாய்வுப்பிரிவைச்சேர்ந்த ஒருவர் தாக்கிவிட்டுத் தப்பிச்சென்றதோடு, பிறிதொரு நபர் துப்பாக்கிப்பிரயோகம் நடத்துவதற்கு இலக்குவைத்த சம்பவமொன்று கடந்த வெள்ளிக்கிழமை மருதங்கேணியில் பதிவானது.

அதனைத்தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் அருள்மதி மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினரான உதயசிவம் ஆகியோர் மருதங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

அதுமாத்திரமன்றி கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகள் தொடர்பில் ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களும், இந்திய அரசியல்வாதிகளும், சிவில் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க திங்கட்கிழமை (05) கொழும்பிலுள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்துக்குச்சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார், சிங்களமொழி மூலமான எழுத்துமூல அறிவிப்பொன்றைக் கையளித்தனர்.

அதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வியாழக்கிழமை (8) காலை 10 மணிக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று அவர் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகும் வரை வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்வதற்குத் தடைவிதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து   கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘தமிழ்த்தேசிய அரசியலை’ முழுமையாக இல்லாமல்செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதனை முன்னிறுத்தியே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

மேலும் ‘கடந்த 2018 ஆம் ஆண்டின் பின்னர் எமது கட்சியின் வளர்ச்சி அபரிமிதமானதாகவும், தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் மாறியது.

நாம் ‘ஜனநாயகம்’ என்ற கருத்தியலுக்கு அப்பால் ‘தமிழ்த்தேசியம்’ என்ற கோணத்திலேயே நீண்டகாலமாகச் செயற்பட்டுவருகின்றோம்.

எனவே அதனை முடக்கும் நோக்கிலேயே இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இருப்பினும் இவையனைத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளாகும்’ என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளை இளைஞர்களே தமது கட்சியின் பலம் என்று குறிப்பிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எனவே இவ்வாறான அச்சுறுத்தல்களின் மூலம் இளைஞர்கள் தமது கட்சியின் செயற்பாட்டு வேலைத்திட்டங்களில் பங்கெடுப்பதைத் தடுப்பதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.