மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட வணபிதா சந்திரா பெர்னாண்டோவின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

102 0
கடந்த 1988 ஆம் ஆண்டு இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 35 ஆவது நினைவேந்தல் மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில்  செவ்வாய்க்கிழமை (6) உணர்வுபூர்வமாக  அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் பல் சமய ஒன்றியத்தின் அனுசரணையுடன் மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் நடைபெற்றது.

இதில் அடிகளாரின் குடும்ப உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள் மற்றும் உறவினர்கள் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரர்கள்  சிவில் சமுக பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது புளியந்தீவு மரியாள் பேராலய பங்குத்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜின் விசேட ஆராதனையையடுத்து அடிகளாரின் சமாதியில் மெழுகுதிரி ஏற்றி  மலரஞ்சலி செலுத்தினர்.

1987 மற்றும் 1988 ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட மதகலவரங்களின் போதும் இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வந்த போதும்  இன நல்லுறவுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மத மக்களை பாதுகாக்கும் மனிதாபிமான செயல்பாட்டில் ஈடுபட்டு ஆன்மீக வாழ்வினை அர்ப்பணித்த அருட்தந்தை சந்திரா அடிகளார் 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் திகதி இனம் தெரியாத ஆயுத தாரிகளினால் ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.