போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து அரசு கண்டுகொள்ளாதது ஏன்? சந்திரிகா

420 0

போரினால் உயிரிழப்புக்களைச் சந்தித்த ஸ்ரீலங்கா படையினரது குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டாலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண பெண்களுக்கு எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்படாமை கவலையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார்.

மகளிர் விவகார அமைச்சு முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களில் இதுதொடர்பான விவகாரத்தில் கவனம் செலுத்துவது குறைவடைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, வட,கிழக்கு பெண்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சர்தேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த விசேட மாநாடு நேற்றைய தினம் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டின் பல பாகங்களிலும் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண் ஆதரவாளர்களும், தலைமை வகிக்கும் தலைவிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, “யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நாட்டில் உள்ளனர். அதிகமானவர்கள் தமிழ் பெண்களாவர்.

அதேபோல முஸ்லிம் பெண்களும் உள்ளனர். போரில் ஈடுபட்டு மரணித்த ஸ்ரீலங்கா படையினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அவர்களது மனைவிமார்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆனால் வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதுவுமே இல்லை.

படையினரின் மனைவிமார்களுக்கு வேறு பிரச்சினைகளும் உள்ளன. யாராவது இதற்கு தலைமை தாங்கி தீர்வுபெற்றுக் கொடுக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் மகளிர் விவகார அமைச்சின் ஊடாக பெண்களின் அபிவிருத்திக்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இவற்றில் வெளிநாடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்கள், யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகிய பிரிவினர் மீது செலுத்தப்படும் கரிசணை போதாது” – என்றார்.