மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் பல்வேறு காரணங்களால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட 28 வாக்குச்சாவடிகளில் இன்று அமைதியான முறையில் மக்கள் ஓட்டளித்து வருகின்றனர்.
மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 22 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 8-ம் தேதி நடைபெற்றது.இந்த தொகுதிகளில் முதல் மந்திரி ஒக்ராம் இபோபி சிங் போட்டியிடும் தவ்பால் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில், முதலமைச்சரை எதிர்த்து சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா போட்டியிடுவதால் அனைவரின் கவனமும் இந்த தொகுதியை நோக்கியே உள்ளது.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இரோம் ஷர்மிளா, சமீபத்தில் போராட்டத்தை முடித்துக்கொண்டு அரசியலில் களமிறங்கியிருக்கிறார். மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய அவர், முதலமைச்சரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
கடந்த 8-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இடையில் வாக்குச் சாவடியை கைப்பற்ற முயன்ற புகார், கள்ள ஓட்டு சர்ச்சை போன்றவற்றால் இந்த தொகுதிகளுக்குட்பட்ட 28 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.
உக்குல், டெக்னோபல், கங்போக்கி, சேனாபதி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள் மேற்கண்ட 28 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணியளவில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. இன்றைய வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாகவும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

