டெங்கு ஒழிப்பு தொடர்பில் ஆளுனர்களுக்கு பிரதமர் விசேட ஆலோசனை

118 0

டெங்கு காய்ச்சலுக்குள்ளாவோர் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகின்ற நிலையில் சகல அரச அதிகாரிகளின் பங்களிப்புடன், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன மாகாண ஆளுனர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

டெங்கு ஒழிப்பு தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆளுனர்கள், மாகாணசபை சபை செயலாளர்கள் , உள்ளூராட்சிமன்றங்களின் ஆணையாளர்கள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மெய்நிகர் ஊடாக பிரதமருடனான இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாகாணங்களில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை சேகரித்து அதற்கேற்ப டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இதன் போது வலியுறுத்திய பிரதமர், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை இடைவிடாது முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் பணிப்புரை விடுத்துள்ளார்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்த மாகாணங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பில் ஆளுநர்கள் இதன் போது கருத்துத் தெரிவித்தனர்.

நிர்மானிக்கப்பட்டு வரும் கட்டடங்கள், பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி டெங்கு நுளம்புகள் பெருகும் நிலை காணப்படுகின்றமையினால் அவ்வாறான இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் திணைக்களத்தின் விசேட பங்களிப்பை இதற்கு வழங்குவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.