மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை: அண்ணாமலை அறிவிப்பு

104 0

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. கட்சி தொண்டனாக தேர்தல் வெற்றிக்கு பாடுபடுவேன் என்றுபாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்த அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவல்துறையினருக்கு உரியநேரத்தில் பதவி உயர்வு கிடைப்பதில்லை. இதுகுறித்து காவல்துறை தலைவர் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2021-22-ம் ஆண்டை விட 2022-23-ம்ஆண்டில் தமிழகத்தில் 22 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 53 ஆயிரம்லிட்டர் சாராயம் போலீஸால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 75 சதவீத டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் கள் விற்பனை செய்ய வேண்டும். இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் வருமானத்தை எவ்வாறு ஈட்ட முடியும் என விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டில் மக்கள் மத்தியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

1985-க்கு பின் கர்நாடகத்தில் ஆளுங்கட்சி திரும்ப ஆட்சிக்கு வந்ததில்லை. ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் இல்லை. அவற்றை அதிகம் வைத்துள்ளவர்கள் பதுக்கிவைத்தவர்கள். எனவே, அவர்களுக்கு மட்டும்தான் பிரச்சினை.

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குதான் பாஜகவில் இணைந்தேன். கட்சி தொண்டனாக தேர்தல் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லிக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டு மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.