நெடுவாசல், மீனவர், குடிநீர் என தீராத பிரச்னைகள்: போராட்ட களமானது தமிழகம்:

233 0

நெடுவாசல், மீனவர் சுட்டுக் கொலை, குடிநீர் பிரச்னை, பவானி ஆறு, அத்திக்கடவு அவினாசி திட்ட விவகாரம் என  அடுத்தடுத்த பிரச்னைகள் குறித்து  மாநிலம் முழுவதும் தினமும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது. மாநில அரசின் செயல்படாத நிலையால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்னைகளால் மக்கள் தினம், தினம் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு வழியாக முடிந்த நிலையில் தற்போது திரும்பிய பக்கம் எல்லாம் போராட்டம் நடைபெற்று வருகிற சூழ்நிலை உருவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் இன்னும் முடியவில்லை.ஆனால் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்பினர், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் நெடுவாசல் செல்லும் சாலைகளை போலீசார் மறித்து சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சியினரைத் தவிர மற்றவர்களை நெடுவாசல் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசு இந்த போராட்டம் குறித்து பெயரளவுக்கு பேச்சுவார்த்தை நடத்தினாலும், மத்திய அரசிடம் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மாநில அரசு எடுக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்சோ, நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்ட இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இறந்த மீனவர் பிரிட்சோ உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ராமேஸ்வரம்
மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மாநிலம் முழுவதும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மீனவர் கிராமங்களில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல நூறு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதற்காக பல்வேறு பகுதிகளில் தினமும் போராட்டம் நடந்து வருகிறது. அதில் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப் போனதால் தினமும் போராட்டம் நடைபெறுகிறது.

குறிப்பாக காவிரியில் தண்ணீரே வராத நிலையில், கர்நாடகா அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைக் கண்டித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவதோடு நிறுத்தி விடுகிறது. இந்தநிலையில் மாநிலம் முழுவதும் அரசுப் பணிகள் நடைபெறவில்லை, குடிநீர் பிரச்னை தீர்க்கவில்லை என்ற காரணங்களால் தினமும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரு நாட்களுக்கு முன் கோவை புதூர் கொளத்துப்பாளையத்தில் அமைச்சர் வேலுமணியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவினாசியில் சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மதுரையில் ரேஷன் பொருட்கள் சரியாக வழங்கப்படுவதில்லை என்று சொல்லி அமைச்சர் செல்லூர் ராஜூவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தேனியில் அதிமுக எம்எல்ஏ ஜக்கையனை மக்கள் முற்றுகையிட்டனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தம்மநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்னைக்காக மக்கள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தினமும் பொதுமக்கள் அடிப்படை பிரச்னைகள், குடிநீர் பிரச்னைகளுக்காக அமைச்சர்கள் முற்றுகை, எம்எல்ஏக்கள் முற்றுகை என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்தான், கடந்த மாதம் மற்றும் இந்த மாதம் இதுவரை ரேசன் கடைகளில் பருப்பு வகைகள், பாமாயில், பச்சரிசி வழங்கவில்லை என்று சொல்லி மாநிலம் முழுவதுமே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு மாநிலம் முழுவதுமே கடந்த சில நாட்களாகவே போராட்டக்களமாகவே மாறி வருகிறது. ஆனால் மாநில அரசோ எந்தப் பிரச்னைகளையும் களையாமல் செயல்படாத அரசாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த சில நாட்களாக முதல்வர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

ஆனால் இவை எல்லாமே ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே முடிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள். தற்போது மதுபானக்கடைகள் மூடி அரசு அறிவித்த அறிவிப்பைத் தவிர வேறு எந்த உத்தரவுகளுமே, செயல்பாட்டுக்கு வரவில்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால்தான் மாநிலத்தில் அரசு செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய அரசின் செயல்படாத தன்மையால் மக்கள் தினமும் தங்களது அடிப்படை தேவைகளுக்காக போராட்ட சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அரசு விரைவாக செயல்பட்டு மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள எல்லையில் போராட்டம்

கோவை மண்டலத்துக்கு குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும் பவானி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு 6 இடங்களில் தடுப்பணை கட்டுவதை கண்டித்து தமிழக-கேரள எல்லையான கோவை க.க.சாவடி பகுதியில் வரும் 12ம்தேதி அனைத்து கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதில், தி.மு.க., காங்., த.மா.கா., விடுதலை சிறுத்தை, கொ.ம.தே.க., கொ.மு.க., உ.உ.க., தந்தை பெரியார் தி.க., வணிகர் சங்க பேரவை, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா, அவினாசி-அத்திக்கடவு போராட்ட குழு, கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கம், மாணவர் அமைப்பு உள்ளிட்ட 40 அமைப்புகள் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் திரள்கின்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இப்போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.