போச்சம்பள்ளி அருகே இசை, நடன கலைஞர்களின் நடுகல் – அரிய வகை என வரலாற்று பேராசிரியர் தகவல்

70 0

போச்சம்பள்ளி அருகே இசைக் கலைஞரும், நடனக் கலைஞரும் சேர்ந்து இருக்கும் அரியவகை நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பண்ணந்தூர் அருகே புளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரிச்சந்திரன் கோயிலில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இக்கோயிலில் இசைக் கலைஞர், நடனக் கலைஞரும் இடம்பெற்றுள்ள அரியவகை நடுகல் உள்ளது. இது 200 முதல் 300 ஆண்டுகள் பழமையானது. நடுகல்லில், இசைக் கலைஞர் கையில் சிறிய தப்பட்டை ஒன்றை இசைத்தவாறு உள்ளார்.

அவர் மேல்சட்டை, வேட்டி, காதுகளில் பெரிய குண்டலங்களை அணிந்துள்ளார். மேலும், இசைக்கும் போதே, இவருடைய கால்களும் சிறிது அசைந்து ஆடுவதுபோல உள்ளது. இதன் அருகில் உள்ள மற்றொரு ஆண் சேவை ஆட்டம் எனப்படும் குருமன் பழங்குடி மக்களின் நடனத்தை ஆடுவதுபோல உள்ளது.

இந்த நடுகல்லில் ஆடை, ஆபரணங்கள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. நடனக் கலைஞரின் வலது கை மேல்நோக்கி நடன அசைவுகளை விளக்குவதுபோலவும், இடது கை கீழ் நோக்கி வளைந்து குட்டை பாவாடை நுனியை இருவிரல்களில் பிடித்து நளினமாக நடனம் ஆடுவதுபோலவும் உள்ளது.

மேலும், இவர் அணிந்துள்ள உடையானது, கழுத்திலிருந்து இடுப்பு வரை தற்கால தெருக்கூத்து கலைஞர்கள் அணிவது போன்ற ஒரே ஆடையாக காட்டப்பட்டுள்ளது. இடது புறம் ஒரு தூண் போன்று காணப்படுகிறது, இந்த நடனமானது ஒரு அரங்கில் நடைபெறுவதாகக் கொள்ளலாம்.

பொதுவாக இசைக் கலைஞருடைய நடுகல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இசைக் கலைஞர் இசைப்பது போன்றும், நடனக் கலைஞர் நடனம் ஆடுவது போன்றும் ஒரே கல்லில் இருப்பது இங்கே காண முடிகிறது. இத்தகைய நடுகல் கண்டறிவது இதுவே முதல்முறையாகும்.

தப்பட்டை மற்றும் சேவை ஆட்டம் போன்றவை குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்றாகும். இது குருமன்ஸ் இன மக்களுடைய நடுகல் என கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.