வீட்டையும், மாநகரையும் தூய்மையாக்க திருச்சியில் 34 இடங்களில் ஆர்ஆர்ஆர் மையங்கள்

65 0

 திருச்சி மாநகரில், வீடுகளில் உள்ள பழைய, பயன்பாடற்ற புத்தகங்கள், பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அளிப்பதற்காக 34 இடங்களில் ‘ஆர்ஆர்ஆர்’ (Reduce, Reuse and Recycle) மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாநகரை தூய்மையானதாகவும், அழகுபடுத்தும் வகையிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ‘எனது வாழ்க்கை- எனது சுத்தமான நகரம்’ என்ற திட்டத்தின் கீழ், வீடுகளில் உள்ள தேவையற்ற, பயன்பாடற்ற பொருட்களை மாநகராட்சி நிர்வாகம் பெற்றுக் கொண்டு, அவற்றில் நல்ல நிலையில் உள்ள பொருட்களை தேவையுள்ள மக்களுக்கும், மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களை மீண்டும் பயன்படத்தக்க பொருட்களாக மாற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள தேவையற்ற ஆடைகள், படுக்கை விரிப்புகள், புத்தகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பொம்மைகள், பழைய காகிதங்கள் போன்றவற்றை கொண்டு வந்து கொடுப்பதற்காக, மாநகரில் 34 இடங்களில் ‘ஆர்ஆர்ஆர்’ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மண்டலம் வாரியாக வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆர்ஆர்ஆர் மையங்கள்: மண்டலம் 1: 3-வது வார்டு சக்தி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள வடிகால் தெரு, 4-வது வார்டு பஞ்சக்கரை யாத்ரி நிவாஸ் அருகில், 12-வது வார்டு குடமுருட்டி அருகே அய்யாளம்மன் படித்துறை, 15-வது வார்டு ஓயாமரி சாலை.

மண்டலம் 2: 18-வது வார்டு விறகுப்பேட்டை, 20-வது வார்டு பாலக்கரை பழைய மதுரை சாலையில் உள்ள லாரி நிறுத்துமிடம், 30-வது வார்டு குப்பாங்குளம் அம்மா உணவகம் அருகில், 31-வது வார்டு பூக்கொல்லை மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தம், 48-வது வார்டு டிவிஎஸ் டோல் கேட் ஜி கார்னர், 49-வது வார்டு காஜாபேட்டை தண்ணீர்த் தொட்டி, 59-வது வார்டு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள கழிவு நீரேற்று நிலையம், 34-வது வார்டு சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலை.

மண்டலம் 3: 36-வது வார்டு மேல அம்பிகாபுரம் பிள்ளையார் கோயில் தெரு, 38-வது வார்டு பாப்பாக்குறிச்சி, 45-வது வார்டு பொன்னேரிபுரம் சாலையில் உள்ள மாவடிக்குளம், 46-வது வார்டு பொன்மலைப்பட்டி ஜே.ஜே. நகரில் உள்ள ரன்வே ரோடு.

மண்டலம் 4: 52-வது வார்டு மார்சிங்பேட்டை சாலையில் உள்ள காவலர் குடியிருப்பு, 54-வது வார்டு பறவைகள் சாலையில் உள்ள ஜென்னி பிளாசா, 56-வது வார்டு கருமண்டபம் தகன மையம், 58-வது வார்டு கிராப்பட்டி வார்டு அலுவலகம் அருகில், 61-வது வார்டு ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் உள்ள காமராஜ் நகர், 62-வது வார்டு பஞ்சப்பூர் பசுமைப் பூங்கா, 64-வது வார்டு கே.கே. நகர் உழவர் சந்தை அருகே உள்ள தங்கையா நகர், 65-வது வார்டு செம்பட்டு பசுமை நகர்.

இந்த ‘ஆர்ஆர்ஆர்’ மையங்கள் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இவை, தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் கூறியது: இந்தத் திட்டம் முதற்கட்டமாக 10 நாட்களுக்கு செயல்படுத்தப்படும். பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய புத்தகங்கள், பொம்மைகள், ஆடைகள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பொருட்கள், பழைய காகிதங்கள் போன்றவற்றை இந்த மையங்களில் உள்ள மாநகராட்சி பணியாளர்களிடம் கொடுக்கலாம்.

அதேபோல, தங்களுக்கு ஏதேனும் பொருட்கள் தேவைபட்டால், மையத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு, தேவையான பொருட்கள் இருந்தால் பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களை, இந்த மையங்கள் வாயிலாக பிறருக்கு கொடுத்து உதவலாம். வீட்டையும், மாநகரையும் தூய்மையாக வைத்துக் கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.