நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் ஊழல் மோசடி, இலஞ்சம் ஆகியன முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை.
வழங்கப்படும் நிதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்பதை எதிர்வரும் ஜூன் மாதம் நாட்டுக்கு வருகை தரவுள்ள நாணய நிதிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து மாற்றுத்திட்டம் ஏதும் இல்லை என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
மாற்றுத் திட்டம் இருந்தாலும் அதனை செயற்படுத்த அரசாங்கம் தயார் இல்லை.சர்வதேச நாணய நிதியத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
நிதியுதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள கடுமையான நிபந்தனைகளுக்கு மாத்திரம் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தும் போது நடுத்தர மக்கள் மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்வார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் ஆகியவற்றுக்கான கட்டணம் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கட்டண அதிகரிப்பை தொடர்ந்து பெரும்பாலான வீடுகளுக்கான மின் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய லங்கா டெலிகொம்,இலங்கை காப்புறுதி நிறுவனம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
டெலிகொம் நிறுவனத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கினால் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தரவு கட்டமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.
அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டால் நடுத்தர மக்களுக்கான இலவச சேவைகளுக்கு விலை நிர்ணயிக்கப்படும் அதன் தாக்கத்தையும் மக்கள் எதிர்க்கொள்ள வேண்டும்.
தேசிய கடனை மறுசீரமைக்க போவதில்லை என அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது.ஆனால் தற்போது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு முன்னர் தேசிய கடன்களை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படும்.வங்கி வைப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதம் புதன் கிழமை (26) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பின் சாதக காரணிகளை மாத்திரம் பெருமையாக குறிப்பிடும் தரப்பினர் எதிர் விளைவுகள் தொடர்பில் கருத்துரைப்பதில்லை.இதனை பிரதான குறைப்பாடாக கருதுகிறோம்.விவாதத்தின் போது இவ்விடயங்களை சுட்டிக்காட்டுவோம்.
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் ஊழல் மோசடி,இலஞ்சம் ஆகியன முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. வழங்கப்படும் நிதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்பதை எதிர்வரும் ஜூன் மாதம் நாட்டுக்கு வருகை தரவுள்ள நாணய நிதிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்துவோம் என்றார்.

