நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தைத் தோற்கடிப்பதற்கு எதிர்வரும் 25ஆம் திகதி அனைவரும் அணிதிரள வேண்டும் என ரெலோ ஊடகப் பேச்சாளர் குரு சுவாமி சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் (22.04.2023) யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் போராட்ட அழைப்புத் தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் 30 வருட காலமாகப் பயங்கரவாத சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பெயர் மாற்றம் செய்து அதை விட மோசமான சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.புதிய பயங்கரவாத சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் மக்கள் வீதியில் கூடிப் பேசுவதும் அரசுக்கு எதிரான சதி முயற்சியாகப் பார்க்கப்பட்டு கைது செய்யப்படலாம்.
நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத சட்டம் தமிழ் மக்களை அதிகமாகப் பாதித்த நிலையில் புதிய சட்டம் நாட்டு மக்களையே பாதிக்கும் அபாயம் உள்ளது.
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தெற்கில் வலுப்பெறு வருகின்ற நிலையில் புதிய சட்டமூலத்திற்கும் பெரும்பாலான எதிர்ப்புகள் எழுந்த வண்ண உள்ளன.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளை வெளிப்படுத்தும் முகமாக வடக்கு கிழக்கு முடங்கிய எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பூரண நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
எமது கோரிக்கைகளான வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும், தமிழ் மக்களின் தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்படுதல், திட்டமிட்ட பெளத்த மயமாக்கல் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு ச் சட்டம் போன்றவற்றை அரசு நிறுத்த வேண்டும் .
ஆகவே தமிழ் மக்கள் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை தோற்கடிப்பதற்கும் தமிழ் மக்களின் பூர்வீக இடங்கள் அபகரிப்பதற்கு எதிராக அரசாங்கத்துக்குச் செய்தியைக் கூறுவதோடு சர்வதேசத்தின் பார்வையை ஈர்ப்பதற்கும் எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய பூரண நிர்வாக முடக்கலுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

