தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் பங்கேற்காது

64 0

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதில் நாம் பங்கேற்போம். அதனை விடுத்து தேசிய அரசாங்கம் என்ற பெயரில் அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களை நியமிப்பதற்கும் துணை போக முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

தேசிய அரசாங்கம் குறித்து பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற நிலையில் அது தொடர்பில் சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேசிய அரசாங்கம் குறித்து நாம் எந்தவொரு கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை. அதனை நாம் விரும்பவும் இல்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலம் முதல் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதே சுதந்திர கட்சியின் நிலைப்பாடாகக் காணப்படுகிறது. எனினும் அவ்வாறானதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இன்றும் நாம் அதனையே வலியுறுத்துகின்றோம். எனவே குறுகிய காலத்திற்காகவது அனைத்து கட்சிகளும் கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

அதனையடுத்து தேர்தல் ஊடாக எவருக்கும் ஆட்சியைமைப்பதற்கும் , பதவிகளை ஏற்பதற்கும் வாய்ப்புக்கள் உண்டு. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.

அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன் குறுகிய அமைச்சரவையைக் கொண்ட சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம்.

ஆனால் தற்போது தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் அமைச்சரவை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

அமைச்சுப்பதவிகளுக்காக அன்றி நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தயாராக உள்ளனர் என்றால், முறையான வேலைத்திட்டத்துடன் 10 ஆண்டுகளுக்குள் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.