உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஆன்ம இளைப்பாற்றிக்கான 4 ஆவது ஆண்டு விசேட ஆராதனைகள்

229 0

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குல்  சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான 4 ஆவது ஆண்டு விசேட ஆராதனைகள் வெள்ளிக்கிழமை (21) காலை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில்  ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கொழும்பு  கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் நினைவுத் திருப்பலியானது காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னதாக, காலை 7 மணிக்கு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெறும் திருப்பலியை கொழும்பு மறை மாவட்ட துணை ஆயர்களான  மெக்ஸ்வெல் சில்வா மற்றும் அன்தனி ஜயக்கொடி ஆகியோர் கூட்டாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளனர்.

மேலும், கொழும்பு மறை மாவட்டத்திலுள்ள சகல தேவாலயங்களிலும்  நாட்டிலுள்ள பிரதான சில கத்தோலிக்க தேவாலயங்களிலும் காலை 7 மணிக்கு நினைவுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

விசேட நடை பவனி

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குலில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக விசேட நடை பவனியும் , மக்கள் மதில் வேலைத்திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நடை பவனியானது, கட்டுவப்பிட்டி ஆலயத்திலிருந்து கொச்சிக்கடை திருத்தலம் வரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (20) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிய இந்த நடை பவனியானது,  நீர்கொழும்பு வீதி வழியாக கந்தானை, வத்தளை ஊடாக கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தை வந்தடைந்து அங்கிருந்து, வெள்ளிக்கிழமை (21)  காலை 8 மணிக்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடையவுள்ளது.

நடைபவனி நிறைவின் பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களையும், காயமடைந்தவர்களையும் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பார்.

‘மக்கள் மதில்’ வேலைத்திட்டம்  

கட்டுவப்பிட்டி முதல் கொழும்பு கொச்சிக்கடை வரையிலான வீதியின் இருமரங்கிலும் வெள்ளிக்கிழமை (21) காலை 8.30 மணி முதல் காலை 9 மணி வரை ‘மக்கள் மதில்’  வேலைத்திட்டமும்  கொழும்பு  மறை மாவட்ட ஆயர் இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது 8.45 மணிக்கு 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்படும்.

கர்தினால் ஆண்டகை வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான பிரதான சூத்திரதாரிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படவும், நாட்டில்  நீதியை நிலை நாட்டுவதற்காகவும் இன,மத, மொழி, கட்சி வேறுபாடின்றி மக்கள் அனைவரும் ‘மக்கள் மதில்’ வேலைத்திட்டத்தில் பங்கேற்குமாறு நாட்டின் அனைத்து மக்களிடமும் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்திருந்தார்.

வீடுகளிலும், அலுவலங்களிலும்  வேலைத்தளங்களிலும் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை (21) கா‍லை 8.45 மணிக்கு 2 நிமிட  மெளன அஞ்சலி செலுத்துமாறும் ஆண்டகை பொது மக்களை வலியுறுத்தியிருந்தார்.

சீயோன் தேவாலயத்தில் ஆராதனை

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை விசேட செப ஆராதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவ்வாலயத்தின் போதகர் ரொஷான் மகேசன் தெரிவித்திருந்தார்.

ஆராதனையை அடுத்து பலியானவர்களின் நினைவாக செப தோட்டம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளதாகவும், மாலை 5.30 மணிக்கு பலியானவர்களின் நினைவாக கல்லடியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு  முன்பாக மெழுகுவர்த்திகள் ஏற்றப்படும் எனவும் அவர் மேலும்  குறிப்பிட்டிருந்தார்.

272 பேர் பலி;  500 பேர் காயம்

2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்தன்று  தேவாலயங்கள், கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள், தெஹிவளை கெஸ்ட்  ஹவுஸ் மற்றும் தெமட்டகொடை வீட்டுத்தொகுதி ஆகிய 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 272 பேர் பலியாகியிருந்ததுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் இதில் இன்னமும் வைத்தியசாலைகளிலும், வீடுகளிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.