நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கமைய மறுசீரமைப்புகளை அரசு ஆரம்பிக்க வேண்டும்

156 0

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய அரசாங்கம் வெகுவிரைவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். அது பாரிய சவால் மிக்கதாகவே அமையும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

மறுசீரமைப்புக்களின் போது மக்கள் மீதான சுமைகளை அதிகரிக்கும் தீர்மானங்களை விடுத்து , உற்பத்தி பொருளாதாரம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த தமிழ் – சிங்கள புத்தாண்டை விட இவ்வாண்டு ஓரளவு மக்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனினும் நெருக்கடிகள் முற்றாக சீராகியுள்ளதாகக் கூற முடியாது. பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளமையை பெருமிதமாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். பணவீக்கமானது 70 சதவீதத்திலிருந்து 50.3 சதவீதமாகவே வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் அர்த்தம் பொருட்களின் விலைகள் 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என்பதாகும். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஒரே சந்தர்ப்பத்தில் 50 சதவீதத்தினால் அதிகரித்தால் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களால் எவ்வாறு வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல முடியும்? இவை அனைத்தையும் கருத்திற் கொண்டே அரசாங்கம் அதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மறுசீரமைப்புக்கள் மூலம் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படவில்லை எனில் அது பிரயோசனமற்றதாகும். மறுசீரமைப்புக்கள் எனும் போது வட்டி வீதங்களை அதிகரித்தல் , மின் கட்டணங்களை அதிகரித்தல் மாத்திரமல்ல.

உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரித்தல் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலமும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய அரசாங்கம் வெகுவிரைவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். அது பாரிய சவால் மிக்கதாகவே அமையும்.

எனவே நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப் பெறும் கடனுதவிகளை அநாவசிய செலவுகளுக்காகப் பயன்படுத்தாமல் , வரவு – செலவு திட்டத்தில் வரவு மற்றும் செலவுக்கிடையிலான இடைவெளியை சமநிலைப்படுத்துவதற்காகப் பயன்படுத்த முடியும் என்றார்.