ஊடக அடக்குமுறைகளை முன்னெடுக்கவே ஒளிபரப்பு அதிகார சட்டம்

84 0

டகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை முன்னெடுப்பதற்காக ஒளிபரப்பு அதிகார சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுதந்திரமான ஊடகம் அற்ற நாட்டில் சர்வாதிகார ஆட்சி தலைதூக்கும். அதற்கு ஒருபோதும் இடமளித்துவிடக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் ஒளிபரப்பு அதிகார சட்டம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை மேலும் பலப்படுத்துவதற்காக ஒளிபரப்பு அதிகார சட்டத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்தை முடக்குவதற்காகவே இந்த சட்டத்தை அரசாங்கம் உருவாக்குகிறது.

ஊடகங்களுக்கு எதிரான இவ்வாறான அடக்குமுறைகளை அனைவரும் இணைந்து முற்றாக எதிர்க்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு ஊடகம் என்பது அத்தியாவசியமான காரணியாகும்.

சுதந்திரமான ஊடகம் அற்ற நாட்டில் சர்வாதிகார ஆட்சி தலைதூக்கும். இலங்கை சர்வாதிகார நாடாக மாற்றமடைவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மோசமான நடவடிக்கைகளை மக்களிடமிருந்து மறைப்பதற்காகவே ஊடகங்களை ஒடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஊடாக அரசாங்கத்துக்கு சார்பான செய்திகளை மாத்திரமே வெளியிடக்கூடியவாறான ஊடக கலாசாரம் உருவாக்கப்படவுள்ளது.

இந்த முயற்சியை தோல்வியடைச் செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்னின்று செயற்படும். அதேபோல் சகல தரப்பினரும் இதற்கு முழுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்துக்கு மேலதிகமாக மக்களை மேலும் முடக்குவதற்காகவே இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதனை தோல்வியடையச் செய்வது எமது கடமையாகும். இது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் மனிதாபிமான செயற்பாடாகும் என்றார்.