பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு உத்தேசித்திருக்கும் மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்த கருத்து முற்றிலும் தவறானது என்பதுடன் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தக்கூடியதாகும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு இருக்கும் மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பாக சபாநாயகரை சுட்டிக்காட்டி தெரிவித்திருந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, சபாநாயகர் அலுவலகம் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு தெரிவித்ததாக குறிப்பிட்டு எதாவது கருத்து தெரிவிப்பதாக இருந்தால், பொறுப்புவாய்ந்த பாராளுமன்ற உறுப்பினராக உதய கம்பன்பில, அதனை தெரிவிப்பதற்கு முன்னர், அதற்கு ஆதாரமான ஹன்சாட் அறிக்கையில் பதிவிடப்பட்டிருக்கும் ஒலி, ஒளி ஊடகத்தை சரியாக பரீட்சித்து பார்ப்பதே பொருத்தமாகும்.
அத்துடன் வேறு ஒருவரின் கூற்றை பிழையாக திருபுபடுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக பொது மக்களை பிழையாக வழிநடத்த, உதய கம்மன்பில எடுக்கும் கீழ்த்தரமான முயற்சியை முற்றாக நிராகரிப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

