அமைச்சுப்பதவியில் ஆசை கொண்ட ஓரிருவர் அரசாங்கத்துடன் இணையும் வாய்ப்புள்ளது. எம்மிலிருந்து எவரும் கட்சி தாவ மாட்டார்களென நூறு வீதம் உறுதியாகக் கூற முடியாது. அடிக்கடி கட்சி தாவுபவர்களுக்கு இது ஒரு பிரச்சினையல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
அத்தோடு தம்முடன் கூட்டணி அமைக்க விரும்பினால் ஐக்கிய தேசிய கட்சிக்கும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதாகக் குறிப்பிட்ட அவர் , விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பாரிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுஜன பெரமுனவிலுள்ள ஒரு சிலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே அடுத்த ஜனாதிபதியாகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும் சிலர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி என்கின்றனர். ஒரு சிலர் ராஜபக்ஷ குடும்பத்தையே ஏற்றுக் கொள்ளும் மன நிலைமையில் உள்ளனர். எவ்வாறிருப்பினும் தற்போது பொதுஜன பெரமுன ராஜபக்ஷ முகாமிலும் , ரணில் முகாமிலும் பிளவடைந்துள்ளன.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே எனக் கூற வேண்டிய நிலைமைக்கு பொதுஜன பெரமுன தள்ளப்பட்டுள்ளது. நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கிய பொதுஜன பெரமுனவே இவ்வாறு பிளவடைந்துள்ளது.
இன்று ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்கு வங்கி கிடையாது. ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே காணப்படுகிறது. எனவே எந்தவொரு தேர்தலுக்கும் நாம் தயாராகவே உள்ளோம். எமக்கிடையில் எவ்வித பிளவுகளும் இல்லை.
ஓரிருவர் கட்சி தாவக் கூடும். நூறு வீதம் எவரும் இணைய மாட்டார்கள் எனக் கூறப் போவதில்லை. சிலர் அமைச்சுப்பதவிகளை ஏற்பதற்கு தயாராகவுள்ளனர். அடிக்கடி கட்சி தாவுபவர்களுக்கு அது ஒரு பிரச்சினையல்ல.
ஐக்கிய மக்கள் சக்தியாக நாம் மிகுந்த பலமுடையவர்களாகவுள்ளோம். எதிர்காலத்தில் ஆட்சியமைக்கக் கூடிய பரந்த கூட்டணியை அமைப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றோம். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அதற்கு தலைமைத்துவம் வகிப்பார்.
பல்வேறு கட்சிகள் , அமைப்புக்கள் எம்முடன் இணைந்துள்ளன. எதிர்காலத்திற்கு பொறுத்தமான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான குழு எம்முடன் இருக்கிறது. எம்முடன் கூட்டணியமைக்க விரும்பினால் ஐக்கிய தேசிய கட்சியும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கலாம் என்றார்.

