ஜனநாயக நியமங்களை மீறும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும்

137 0

யங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை (Anti – Terrorism Bill) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை தாமதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

இந்த தீர்மானத்தை வரவேற்றிருக்கும் தேசிய சமாதானப் பேரவை, இச்சட்டமூலம் ஜனநாயக பரப்பிலும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு இருக்கும் உரிமைகளிலும் எதிர்மறையான தாக்கத்தை செலுத்தக்கூடியதாக இருப்பதால், இச்சட்டமூலத்தை சமர்ப்பிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

எந்தவொரு சட்ட சீர்திருத்தத்திலும் அடிப்படை உரிமைகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படவேண்டியது அவசியமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அரசியலமைப்பின் பிரகாரம், மக்களின் அதிகாரம் அவர்களின் பயனுக்காகவே அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இவ்விரு குறிக்கோள்களையும் அடையத் தவறுகிறது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய சட்டமூலம், அது பதிலீடு செய்ய உத்தேசிக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் விட மிகவும் மோசமான பல அம்சங்களை கொண்டதாக இருக்கிறது.

இச்சட்டமூலத்தின் ஏற்றுக்கொள்ளமுடியாத பல அம்சங்களில், பயங்கரவாதத்துக்கு அது கொடுக்கும் தெளிவற்றதும் விசாலமானதுமான  வியாக்கியானம் மிகவும் முக்கியமானதாகும்.

அரசாங்க சொத்துக்களை, ஏன் தனியார் சொத்துக்களையும் கூட களவாடுவதையும் தொழிற்சங்க நடவடிக்கையையும் இச்சட்டமூலம் ‘பயங்கரவாதச் செயல்கள்’ என்று வியாக்கியானப்படுத்துகிறது.

யார் யாரை கைதுசெய்ய முடியும்? அவர்களை யாரால் கைதுசெய்ய முடியும்? எந்த நோக்கத்துக்காக அவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள்? இப்படியான விடயங்களை பொறுத்தவரையில் சட்டமூலம் மிகப் பரந்தளவுக்கு இடங்கொடுப்பதாக அமைகிறது.

எதிர்ப்பு காட்டுதல், பிரசுரங்களை வெளியிடுதல், அரசாங்கத்திடம் இருந்து நடவடிக்கைகளை எதிர்பார்த்து கோரிக்கைகளை முன்வைத்தல் மற்றும் இன, மத தலங்களுடன் தொடர்புடைய தகராறுகள் உட்பட பெருவாரியான, நியாயபூர்வமான நடவடிக்கைகளை இச்சட்டமூலம் பயங்கரவாத வீச்செல்லைக்குள் கொண்டு வருகிறது.

இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தாங்கள் ‘நியாயமான முறையில் சந்தேகிக்கும்’ எவரையும் பிடியாணையின்றி கைதுசெய்வதற்கு பொலிஸாரை அல்லது இராணுவத்தினரை அல்லது கரையோரக் காவல் படையினரை சட்டமூலம் அனுமதிக்கிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடு செய்வதற்கு புதிய சட்டமூலத்தை வரைந்தவர்களின் மனப்போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று தோன்றுகிறது. இது துரதிர்ஷ்டவசமானது.

‘பயங்கரவாதம்’ என்ற காரணத்தைக் கூறி அரசியல் செயற்பாடுகளை ஒடுக்குவதில் நாட்டம் கொண்ட மனப்போக்கே இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளே தெரிகின்றன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாம் அனுபவித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 14  வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த மூவர் கடந்த மாதம் தான் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

ஒருவரை கைதுசெய்யும் பொலிஸாரோ அல்லது இராணுவத்தினரோ, கைதானவரை தாங்கள் தெரிவுசெய்யும் ஓர் இடத்தில் 24 மணித்தியாலங்கள் வரை தடுத்துவைப்பதற்கு புதிய சட்டமூலம் அனுமதிக்கிறது. நிலைவரத்தை பொறுத்து அவரை மேலும் கூடுதலான நேரம் தடுத்துவைக்க முடியும்.

அவ்வாறு கைதுசெய்யப்படக்கூடிய ஓர் இளைஞர் அல்லது யுவதியின் அவலத்தை நினைத்துப் பாருங்கள்.

கைதுசெய்யப்படும் ஒருவருக்கு எதிராக பிரதி பொலிஸ்மா அதிபர் தரத்தில் உள்ள ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கையெழுத்திட்டு பிறப்பிக்கக்கூடிய தடுப்புக்காவல் உத்தரவுக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் மூன்று மாதங்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கமுடியும்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அரசியலமைப்பை மீறுவதுடன் ஜனநாயக சமுதாயம் ஒன்றில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரங்களுக்கும் மனித உரிமைகளுக்கும்  ஆபத்தை உண்டாக்கி, அவற்றை பயங்கரவாதமாக உருமாறாட்டம் செய்வதால், அதை தேசிய சமாதானப் பேரவை எதிர்க்கிறது.

புதிய தேவைகளை கையாள்வதற்கு அவசியமானால், தற்போது நடைமுறையில் உள்ள தண்டனைச் சட்டக் கோவையையும், குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையையும் பலப்படுத்தலாம் என்று நாம் யோசனை முன்வைக்கிறோம். அதற்கு பதிலாக பயங்கரவாதத்தை கையாள்வதற்கு முற்றிலும் புதிய சட்ட மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் தேவையில்லை.

புதிய பாதுகாப்புச் சட்டங்கள் அவசியம் என்று கருதினால் அவற்றை எமது அரசியலமைப்பும் சர்வதேச நியமங்களும் நெறிப்படுத்துகின்ற மனித உரிமைகள் வரையறைக்குள் இயற்றுவது  அவசியம்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை கோருகிறது. இல்லாவிட்டால், விளைவுகளை பொருட்படுத்தாமல் அடிப்படை மனித உரிமை மீறல்களை செய்வதற்கும், குறைகளை சுட்டிக்காட்டி கண்டிப்பவர்கள் மற்றும் எதிர்க்கருத்து கொண்டவர்களை மௌனமாக்குவதற்கும் அந்த சட்டம் அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கும்.