உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களுக்கு நீதி கோரி வாகனப் பேரணி

160 0

2019 உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் பலியான மற்றும் காயமடைந்தவர்களுக்கு நீதி வேண்டி போப்பிட்டிய புனித நிக்கலோஸ் தேவாலயத்திலிருந்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் வரையில் வாகன பேரணியொன்று ஞாயிற்றுக்கிழமை (9) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் தேசிய மக்கள் தொடர்பாடல்  நிலையத்தின் பணிப்பாளர் அருட் தந்தை ஜூட் கிரிஷாந்த ‘  தெரிவித்தார்.

போப்பிட்டிய புனித நிக்கலோஸ் தேவாலய மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வாகன பேரணியானது, ஞாயிறுக்கிழமை (09) முற்பகல் 11 மணிக்கு புனித நிக்கலோஸ் தேவாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு நீர்கொழும்பு வீதியின் ஊடாக கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயம் வரையில் இந்த வாகன பேரணி இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

” 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயம்,  மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய மதஸ்தலளங்களிலும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் 270 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதுடன், இன்னும் பலர் இன்னமும் படுத்த படுக்கையில் தமது வாழ்நாளை மிகவும் கஷ்டத்துடன் கழிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், 2019 உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் இடம்பெற்று 4 ஆண்டுகளாகின்ற போதிலும், குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருந்து வருகின்றனர்.

இந்த குண்டுத்தாக்குதல்களில் பலியான மக்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி வேண்டி இந்த வாகன பேரணியை போப்பிட்டி புனித நிக்கலோஸ் தேவாலய பங்கு மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்” என்றார்.