தற்கொலைக்கு தூண்டும் நீட் பயிற்சி மையங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

63 0

மன உளைச்சலை ஏற்படுத்தி மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் நீட் பயிற்சி மையங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த மாணவி நிஷா தற்கொலை செய்து கொண்டதற்கு நீட் தேர்வு குறித்த அச்சம் ஒரு காரணம் என்றால், தனியார் பயிற்சி நிறுவனம் ஏற்படுத்த மன உளைச்சல் தான் அதை விட முக்கியக் காரணம் என்று தெரியவந்துள்ளது. நீட் பயிற்சி அளிப்பதாக லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள், மாணவர்களை தற்கொலைக்கு தள்ளுவது கண்டிக்கத்தக்கது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியத்தைச் சேர்ந்த என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளியான உத்திராபதியின் மகள் நிஷா, கடந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வை எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. நடப்பாண்டில் மீண்டும் நீட் தேர்வு எழுதும் நோக்கத்துடன், நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக அவர் தயாராகி வந்த நிலையில் கடந்த புதன்கிழமை வடலூரில் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு நீட் தேர்வு குறித்த அச்சத்தையும் கடந்து, தனியார் பயிற்சி மையம் ஏற்படுத்திய மன உளைச்சல் தான் முதன்மைக் காரணம் என்று இப்போது தெரியவந்திருக்கிறது.

நிஷா படித்து வந்த தனியார் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு அந்த பயிற்சி மைய அளவில் ஓர் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட அந்தத் தேர்வில் 400 மற்றும் அதற்கும் கூடுதலாக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியர் மட்டும் தனிக்குழுவாக அறிவிக்கப் பட்டு, அவர்களுக்கு தனியாக பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.