இந்தியாவின் கடன் வசதியினூடாக சர்ச்சைக்குரிய மருத்துவப் பொருட்களைக் கொள்முதல் செய்தமை தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்தினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவனாது (SC/FR 65/2023) நேற்றைய தினம் (06) வழக்கினை தொடர்வதற்கான அனுமதியுடன் (Leave-to-proceed) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் கடன் வசதியின் கீழ் Savorite Pharmaceuticals எனும் வரையறுத்த தனியார் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் வினைத்திறன் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து குறித்த மருத்துவ பொருட்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அமைச்சர்கள், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA) மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
கொள்முதல் செயல்முறையின் சட்டப்பூர்வமான தன்மை தொடர்பில் கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளதை குறிப்பிட்டு, நீதிமன்றம் இரண்டு இடைக்கால நிவாரணங்கள் (interim reliefs) வழங்கியது,
• கொள்வனவு செய்யப்பட்ட மருந்துப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான தேவைப்பாடுகள் மற்றும் கொள்முதல் சட்டபூர்வமானது என்பவற்றை நிரூபிக்கும் வரை நீதிமன்றத்தின் அனுமதியின்றி மேலும் மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்துதல்.
• ஏற்கனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மருந்துப் பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் வினைத்திறன் போன்றவற்றை சோதனை செய்து NMRA வினால் மேற்கொள்ளப்படும் சுயாதீனமான தீர்மானத்தின் பின்னர் அவற்றை பயன்பாட்டுக்கு விடுவித்தல்.
பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கானது, சுகாதார அமைச்சர் மற்றும் NMRA வின் தலைமை நிறைவேற்று அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் வழிகாட்டல்களுக்கு இணங்காத அவசர கொள்முதல் செயல்முறை மற்றும் கொள்முதல் செயல்முறை மீறல்கள் போன்றவற்றினை சவாலுக்கு உட்படுத்துகிறது.
நாட்டின் பிரஜைகளின் சமத்துவத்திற்கான அடிப்படை உரிமை (உறுப்புரை 12(1)) மற்றும் தகவல் அணுகளுக்கான உரிமை (உறுப்புரை 14A) ஆகியவை மீறப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றின் மீது கடுமையான அலட்சியம் காட்டப்பட்டுள்ளது என்றும் இவை பொது மக்களின் நம்பிக்கை மற்றும் பொது நிதி மீதான துஷ்பிரயோகம் எனவும் இந்த மனுவினூடாக TISL நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த மனுவானது உயர் நீதிமன்ற நீதியரசர்களான மதிப்புக்குரிய முர்து என் பி பெர்னாண்டோ, யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புளி ஆகியோரின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சட்டத்தரணிகளான சேனானி தயாரத்ன, சங்கிதா குணரத்ன மற்றும் லசந்திகா ஹெட்டியாராச்சி ஆகியோர் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
45ம் மற்றும் 46ம் பிரதிவாதிகள் தவிர்ந்த ஏனைய பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் ஆஜரானார்.
மனு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு : https://www.tisrilanka.org/tisl-files-fr-case-regarding…/

