தமிழகத்தில் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின், கீழடி புனை மெய்யாக்க செயலியை அறிமுகம் செய்துவைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் 15 லட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். இதன் தொன்மையைக் கண்டறிய, முறையான அகழாய்வுகள் அவசியம்.
தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழக வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது.
அண்மைக்கால தொல்லியல் சாதனைகள் மூலம் நமது புகழ்பெற்ற, நீண்ட வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் காலவரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

