அரியலூர் – கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடக்கம்

71 0

 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் புகழ்பெற்ற சோழப் பேரரசின் இரண்டாவது தலைநகரமாக கங்கைகொண்ட சோழபுரம் அமைந்துள்ளது.

முதலாம் ராசராச சோழனின் மகனும் அவரைத் தொடர்ந்து ஆட்சி செய்தவருமான முதலாம் ராசேந்திர சோழனால் இந்நகரமானது சோழ நாட்டின் தலைநகராக தோற்றுவிக்கப்பட்டது. முதலாம் ராஜேந்திரன் கங்கை வரை படை எடுத்துச் சென்று வெற்றி பெற்ற தனது பயணத்தை நினைவு கூறும் வகையில் தஞ்சாவூரில் இருந்த தலைநகரத்தை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றி அமைத்தான்.

கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கிய முதலாம் ராஜேந்திரனின் ஆட்சியின்போது முடிகொண்ட சோழன் திருமாளிகை, கங்கைகொண்ட சோழன் மாளிகை, சோழ கேரளம் திருமாளிகை என்ற பெயரில் இங்கு பெரிய அரண்மனைகள் கட்டப்பட்டிருந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் சான்றுகளின் அடிப்படையில் தமிழக அரசு தொல்லியல் துறை கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேடு என்ற பகுதியில் கடந்த 2020 – 2022 ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொண்டது.

இதில் செங்கல் கட்டுமானங்கள், பல்வேறு வகையான பானையோடுகள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் இரும்பு ஆணிகள், செம்பினால் ஆன பொருட்கள், செப்புக் காசுகள், தங்க காப்பு, கண்ணாடி மணிகள் மற்றும் வளையல் துண்டுகள், தந்தத்தினால் ஆன பொருட்கள், வட்டச் சில்லுகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் கெண்டி மூக்குகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன