உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி

61 0

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தும் மற்றுமொரு முயற்சியாக உண்மைமற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு வகை செய்யும் சட்டத்தின் ஒரு பகுதியை உருவாக்குவதற்கு கோரும் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சர்கள் அலிசப்ரி விஜயதாச ராஜபக்ச ஆகியோர் சமர்ப்பித்திருந்த ஆவணத்திற்கே  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவையினால் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படவுள்ள சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் தென்னாபிரிக்காவில் நிறவெறி காலத்திற்கு பின்னர் உருவாக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற ஒன்றை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

யுத்தத்திற்கு பிந்தைய சூழமைவில் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதன் சாதக பாதக தன்மை குறித்து தென்னாபிரிக்காவில் பலதரப்பட்டவர்களுடன் கலந்தாலோசனை செய்த பின்னர் அமைச்சர்கள் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை காரணமாக 1983 முதல் 2009 வரையான காலப்பகுதியில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எவரும் ஆணைக்குழுவின் முன்னிலையில் சமூகமளிக்கலாம் என விடயமறிந்த வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவில் 21 உறுப்பினர்கள் அங்கம்வகிப்பார்கள் பாதிக்கப்பட்ட பல தரப்பினரை செவிமடுப்பதற்கான பல அமர்வுகளில் அவர்கள் பணியாற்றுவார்கள் என விடயமறிந்த வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.