3 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட வழக்கை 30 நாட்களில் விசாரித்து தீர்ப்பளித்தது ஏன்?

174 0

காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையை கூறினார். இது தொடர்பாக அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பூர்னேஷ் மோடி என்பவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடருகிறார். கோலாருக்கும், சூரத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது? என்று தெரியவில்லை. பின்னர் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டுமென சம்பந்தப்பட்ட புகார்தாரர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவரே 2022-ம் ஆண்டு தன் வழக்கை விசாரிக்கக்கூடாது என குஜராத் நீதிமன்றத்தில் தடை கேட்டு பெறுகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி பேசுகிறார். அப்போது பிரதமர் மீதும், குறிப்பிட்ட தொழிலதிபர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகிறார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு 90 சதவீதம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த 9 நாட்களுக்கு பின் அவதூறு வழக்கு தொடர்ந்த நபர் குஜராத் நீதிமன்றத்தில் மனு செய்கிறார்.

அதில் ராகுல்காந்தி மீதான வழக்கு விசாரணைக்கு தடையை நீக்க வேண்டுமென குறிப்பிடுகிறார். இதையடுத்து நீதிமன்றம் அவதூறு வழக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டது. 3 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு ஒரு ஆண்டு தடை வாங்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை 21-02-2023ம் ஆண்டு தொடங்கியது. 30 நாட்கள் விசாரணை முடிந்தபின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 23-ந்தேதி தண்டனை அளிக்கப்பட்டது.

மறுநாள் (24-ந்தேதி) ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். 3 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்தது ஏன்? 30 நாட்களுக்குள் கிரிமினல் வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டிய அவசியம் என்ன? இவ்வாறு ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். பேட்டியின் போது சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம் உடனிருந்தார்.