மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவதை நடிகர் ராதாரவி நிறுத்த வேண்டும்: கனிமொழி

266 0

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவதை நடிகர் ராதாரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக மகளிர் அணி தலைவி கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவதை நடிகர் ராதாரவி நிறுத்த வேண்டும் என்று திமுக மகளிர் அணி தலைவி கனிமொழி  அறிவுறுத்தியுள்ளார். மனஊனம் தான் தாண்ட முடியாத தடை, மாற்றுத்திறனாளிகள் மனத்தடைகளை உடைத்தவர்கள் என்று  குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை, நடிகரும் பேச்சாளருமான ராதாரவி,  மாற்றுத்திறனாளி குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதிமுக-வுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராதாரவி, வைகோவையும், ராமதாஸையும் மாற்றுத்திறனாளிகளோடு  ஒப்பிட்டுப் பேசினார். அவரது பேச்சுக்கு மேடையில் இருந்த அனைவரும் சிரித்தாலும், அவரின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்த பலரும்  தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக மகளிர் அணி தலைவி கனிமொழியும் அந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதுகுறித்து தனது முகநூல்  பக்கத்தில் கனிமொழி தெரிவித்ததாவது,

“ராதா ரவி அவர்கள் மாற்றுத்திறனாளிகளைப் பற்றி இகழ்ச்சியாக, ஏளனமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தலைவர்  கலைஞரின் தொண்டர்கள் இதை ஏற்க மாட்டார்கள். உடல் கூறுகள் வேறுபட்டு இருப்பது ஒரு சிறிய தடைதான். மன ஊனம் தான்  தாண்ட முடியாத தடை. மாற்றுத்திறனாளிகள் மனத்தடைகளை உடைத்தவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.