சர்வதேச நீதிபதிகள், கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கும் சட்டத்தை இலங்கை கொண்டுவர வேண்டும்

234 0

சர்வதேச மனித உரிமைச் சட்ட மற்றும் மனிமாபிமானச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய, கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கும் சட்டத்தை இலங்கை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் நேற்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுஸைனின் இலங்கை தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

17 பக்கங்களைக் கொண்டதாக அந்த அறிக்கை அமைந்துள்ளது.

இலங்கையில் இடைக்கால நீதி முறைமை மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதால், நிரந்தர தீர்வு, நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை என்பன பின்னடைவை எதிர்கொண்டுள்ளதாக ஹுஸைன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொறுப்புக் கூறல் தொடர்பான இலங்கையின் செயற்பாடுகள் மந்த கதியில் உள்ளது.

எனினும், மனித உரிமை விடயம் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு என்பன குறித்து இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட காலப்பகுதியினை மீளாய்வு செய்யும்போது, மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் போதிய அளவாக இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரின் வழக்குகளும் மீளாய்வு செய்யப்பட்டு, அவர்களை விடுவிக்க வேண்டும் அல்லது உடனடியாக சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும்.

சித்திரவதைகள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சரியான விசாரணைகளை நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அத்துடன், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபைக்கும், மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கும் தமிது அறிக்கையில் ஆணையாளர் பரிந்துரை செய்துள்ளார்.