அரசியலில் பெண்கள் போதியளவு ஆளுகை இல்லாது இருப்பது கவலை தரும் விடயமாகவுள்ளது

191 0

குடும்பத்தை சமூகத்தை ஆளும் பெண்கள் அரசியலில் போதியளவு ஆளுகை இல்லாது இருப்பது கவலை தரும் விடயமாகவுள்ளது. அரசியலிலும் அதிகளவான பெண்கள் ஈடுபடவேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்  அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தினால் புதன்கிழமை (29) யாழ்ப்பாணத்திலுள்ள விடுதியில் ஒன்றிணைந்த செயற்பாடுகள் ஊடாக சமத்துவத்தை உறுதி செய்வதுடன் பெண்களின் வலுவூட்டலை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளிலான மகளிர் தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய சூழலில் பெண்களின் ஆளுமை பல்வேறு இடங்களிலும் மிளிர்ந்து வருகின்றது குடும்பத்தை ஆளுகின்றவர்களாக சமூகத்தை ஆளுகின்றவர்களாக பெண்கள் இருக்கின்றபோது அரசியலில் அவர்களின் வகிபாவம் போதியதாக இல்லை. இந்த அரசியலில் பெண்கள் தங்கள் ஆளுமையைவெளிப்படுத்த வேண்டும்.

யாழ்.மாட்டத்தை கற்றறிந்த சமூகம் என்ற நிலையில் பெண்கள் அரசியலில் பங்கு பற்றாது இருக்கின்றமை ஏற்கக்கூடியதாக இல்லை. அவர்கள் அரசியலில் கூடிய பங்களிப்பை செலுத்தி தங்கள் ஆளுமையை வலுப்படுத்தவேண்டும்.

இன்றைய காலத்தில் விரலுக்கு அப்பாற்பட்ட வீக்கமாகத்தான் நிலைமையுள்ளது. அன்றைய காலத்தில் பெண்கள் தங்கள் வருமானத்தைதான் பார்த்தார்கள். ஆனால் இன்று செலவைத்தான் பார்க்கின்றார்கள். இந்த விடயத்தில் கூடிய கவனத்தினை பெண்கள் எடுக்கவேண்டும்.

பெண்கள் தங்கள் ஆளுமையுள்ளவர்களாக இருக்கும் நிலையில் அதனைத் தக்கவைக்கும் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக பேணுவதற்கு தங்களைத் தாங்களே கேள்விக்குட்படுத்துகின்ற நிலையை உருவாக்கவேண்டும். எதனைச் செய்யவேண்டும். எவ்வாறு செய்யவேண்டும். எதனை செய்யக்கூடாது. என்ற விடயங்களில் தங்களைத் தாங்களே கேள்வி கேட்டு ஆளுமையை தக்கவைக்கின்ற நிலையை உருவாக்கவேண்டும் என்றார்.