கிளிநொச்சியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரு பொலிஸாரின் பிணை நிராகரிப்பு!

111 0

கிளிநொச்சி – பளைப் பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு பொலிஸாரினதும் பிணை விண்ணப்பங்கள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மது வரித் திணைக்களத்தின் விசேட நடவடிக்கை பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி பளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட இருவரும் கஞ்சா கடத்த முற்பட்டமை தொடர்பில் கொழும்பிலிருந்து வருகை தந்த மது வரி திணைக்களத்தின் விசேட நடவடிக்கை பிரிவினரால் கடந்த மாதம் 22ஆம் திகதி இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், கடுவல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நேற்றைய தினம் (28.03.2023) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரையும் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளான எஸ்.விஜயராணி சட்டத்தரணி அருச்சணா உள்ளிட்டோர் சந்தேக நபர்கள் சார்பில் பிணை கோரிய விண்ணப்பத்தை முன்வைத்துள்ளனர்.

இதனை அவதானித்த மன்று, பிணை விண்ணப்பத்தை நிராகரித்ததுடன் குறித்த இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளது. இதேவேளை இரு பொலிஸாரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குறித்த இரண்டு பொலிஸாருக்கு எதிரான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற போது குற்றச்சாட்டை மூடி மறைப்பதற்காக நீதிமன்ற வளாகத்துக்குள் கிளிநொச்சி மற்றும் பளை ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் பொலிஸார் உள்ளிட்ட 40இற்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததை அவதானிக்க முடிந்துள்ளது.