”ஜனாதிபதி நாட்குறிப்பேடு”

136 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக பல்வேறு துறைகளின் கீழ் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கமைய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுகளின் எல்லைகள் சமகாலத்தில் காணப்படுகின்ற மாகாண எல்லைகளுக்கமைய சமமாக அமையாதமையால் ஏற்படுகின்ற நடைமுறை ரீதியான சிரமங்கள் குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதியால் 9 ஆவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் தற்போது காணப்படுகின்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுகளின் எல்லைகள் சமகாலத்தில் காணப்படுகின்ற மாகாண எல்லைகளுக்கமைய சமமாக அமையாதமையால் ஏற்படுகின்ற நடைமுறை ரீதியான சிரமங்கள் மற்றும் நிர்வாக ரீதியாக ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக மாகாண அடிப்படையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனை தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்கியுள்ளது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை எட்டுவதற்காக கடந்த 6 மாதங்களாக ஜனாதிபதியால் பொருளாதார மீட்சிக்கான பல்வேறு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கமைய ஏற்றுமதி குறித்து எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள, கடந்த ஜனவரி முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை, பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிர்வாகம் மற்றும் பொருளாதார வேலைத்திட்டங்களுக்கு அப்பால் சமூகம் சார் விடயங்களிலும் ஜனாதிபதியால் தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் பாராட்டியுள்ளது.

ஜனாதிபதியின் இந்த அர்ப்பணிப்பு, இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டு அலுவலகப் பணிப்பாளர் மார்கோ செகோன் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் வலுவான தேசிய மதிப்பீட்டு திறன்களை அபிவிருத்தி செய்வதில், இலங்கையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இது தொடர்பான சட்டமூலமொன்று எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.