ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்புவதா? – பி.எச். பாண்டியனுக்கு அமைச்சர் சீனிவாசன் கண்டனம்

270 0

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பி.எச்.பாண்டியன் கூறிய கருத்துக்களுக்கு அ.தி.மு.க. பொருளாளரும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களை போக்கும் வகையில் விசாரணை நடத்த வேண்டும் என ஓ.பி.எஸ். அணியினர் வலியுறுத்தி வருகின்றனர். இன்று ஓ.பி.எஸ். வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா மரணத்தில் புதிய சந்தேகங்களை கிளப்பியிருக்கிறார். குறிப்பாக, ஜெயலலிதா அவரது வீட்டில் தள்ளிவிடப்பட்டதாக டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருப்பதாக கூறிய அவர், அப்பல்லோ மருத்துவமனையின் சி.சி.டி.வி. பதிவுகளை வெளியிடும்படி வலியுறுத்தினார்.

இதையடுத்து பி.எச்.பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் மற்றும் சி.பொன்னையனுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அம்மாவின் மரணத்தைக் குறித்து பி.எச். பாண்டியனும் அவர் மகன் மனோஜ்பாண்டியனும் உண்மைக்குப் புறம்பாகவும், மக்கள் மனங்களில் விஷத்தை விதைக்கும் வகையிலும் கூறி வரும் கருத்துக்களுக்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் காரணங்களுக்காக அம்மாவின் மரணத்தை விமர்சனத்திற்குள்ளாக்குவது மனிதாபிமானத்திற்கு விரோதமானது. அவர் மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெளிவான விளக்கம் அளித்த பின்னரும் மீண்டும் மீண்டும், சிலர் குதர்க்கமாகப் பேசி வருவதைப் பார்க்கையில், புரியாதவர்களுக்கு விளக்கிச் சொல்லி புரிய வைக்கலாம்; புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்ற கேள்விதான் எழுகிறது.

அம்மாவின் உடல்நிலை எப்படி இருந்து வந்தது? அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் யாவை? அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் யாவை? அம்மா அவர்களுடைய உயிரிழப்பு எதனால் ஏற்பட்டது? என்ற அனைத்து வகையான கேள்விகளுக்கும் அம்மாவுக்கு சிகிச்சை அளித்த அப்பலோ மருத்துவர்கள், லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவர் டாக்டர் ரிச்சர்ட் பீலே, தமிழக அரசின் மருத்துவர் டாக்டர். சுதா சேஷையன் ஆகியோர் 06.02.2017 அன்று விரிவான பதில்களை பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ளனர். நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்திற்கு அப்பலோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையை வழங்கி இருக்கிறது.

அம்மாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய அறிக்கையை, சிகிச்சை அளித்த புதுடெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மத்திய அரசிடம் அளித்துள்ளனர். இத்தனை உண்மைக்கும் பிறகு, அம்மாவின் மரணம் குறித்து நியாயமற்ற வகையிலும், உண்மைக்கு முற்றிலும் புறம்பாகவும், மக்கள் மனதில் அடிப்படையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலும் பேசுவது அம்மாவின் புகழுக்கு இழுக்காகிவிடும் என்பதை அன்புகூர்ந்து நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

அம்மாவுக்கான என்.எஸ்.ஜி. பாதுகாப்புப் படை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவருக்கான தேசிய பாதுகாப்புப் படையினர், அவரின் அன்றாட நிகழ்ச்சிகள் முடிந்து அவர் இல்லம் திரும்பியவுடன் தமக்கான முகாமுக்கு, அதாவது சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள முகாமுக்கு திரும்பிவிடுவர். முக்கிய பிரமுகர்களுக்கான தேசிய பாதுகாப்புப் படையினர் பிரமுகர்களின் பயணங்களின் போது உடன் இருப்பவர்களே தவிர அவர்களது வீடுகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

அம்மாவின் தனிப் பாதுகாவல் அதிகாரி தான், அவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மாநில போலீஸ் உடன் வர அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

“குற்றவாளியை நெருங்கிவிட்டோம்” என்று பி.எச். பாண்டியன் கூறியிருப்பதைப் பார்க்கையில் அவர் ஏதோ விசாரணை மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவர் தனது விசாரணையின் முடிவுகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கட்டும்.

1988-ல், தான் சபாநாயகராக அமர்ந்துகொண்டு ஆடிய சூதுமதி ஆட்டத்தால் அ.தி.மு.க. ஆட்சியை கலைத்துவிட்டு தி.மு.க. மறுவாழ்வு பெற உதவியதைப் போல இன்று நடைபெறாமல் போய்விட்டதே என்ற விரக்தியால் பேசும் பி.எச். பாண்டியன் ஆலமரம் போல் வளர்ந்து நிற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டுவதாக நினைத்து வார்த்தைகளை வீச வேண்டாம். எதையும் எதிர்த்து நின்று சாதிக்கும் ஆற்றல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.