தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

315 0

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகலில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகலில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 23-ந் தேதி தொடங்கியது. அன்று கவர்னர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார்.

இந்த நிலையில், அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கடந்த பிப்ரவரி 16-ந் தேதியன்று புதிய முதல்-அமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி பதவி ஏற்றார். பிப்ரவரி 18-ந் தேதியன்று சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து, எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து முதல்-அமைச்சராக நீடிக்கிறார்.இந்த சூழ்நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இம்மாத மத்தியில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்படும். பின்னர் ஒவ்வொரு துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு அந்தந்த நிதி ஒதுக்கப்படும்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை கூட்ட அரங்கத்தில் நடை பெறுகிறது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் பற்றி விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு துறைகளிலும் அறிவிக்கப்படவுள்ள சிறப்புத் திட்டங்கள், தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அரசியல் ரீதியான விவகாரங்கள் ஆகியவை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன.முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.