கீழே தள்ளிவிட்டது யார்? மூச்சை நிறுத்தச் சொன்னது யார்? ஜெயலலிதா மரணத்தில் சதி

277 0

* ஓபிஎஸ் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
* சசிகலா அணி கலக்கம்
* தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 செப். 22ல் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
* 75 நாள் சிகிச்சைக்கு பின் டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு மரணம் அடைந்தார்.
* அவர் சிகிச்சை பெற்ற காலத்தில் கவர்னர் வித்தியாசாகர்ராவ், மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு யாரையும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

சென்னை: ஜெயலலிதா, போயஸ் கார்டனில் தள்ளி விடப்பட்டார்; ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை நிறுத்த சொன்னது யார்? இசட் பிளஸ் பாதுகாப்பு படையினரை ஆஸ்பத்திரிக்குள் அனுமதிக்காமல் தடுத்தது யார்? என்று  ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த பி.எச்.பாண்டியன் அடுக்கடுக்காக கேள்வி  எழுப்பியுள்ளார். மேலும் அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பான குற்றவாளியை  நெருங்கி விட்டதாகவும் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி திடீர்  உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், அவர் டிசம்பர்  5ம் தேதி இரவு காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும், அதிமுகவின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், சென்னை  கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில்  நேற்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் பேட்டியளித்தார். அப்போது ஜெயலலிதா மரணத்தில் சதி நடந்திருப்பதாக அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால் சசிகலா அணி பெரும் கலக்கம் அடைந்துள்ளது. பி.எச். பாண்டியன் கூறியதாவது: அதிமுக எம்பிக்கள் 12 பேர்,  குடியரசு தலைவர் பிரணாப்பிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில்  உள்ள மர்மங்களை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்.

வருகிற 8ம் தேதி தமிழகம் முழுவதும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை  கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். தள்ளிவிடப்பட்டார்: ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22ம் தேதி வீட்டிலேயே கீழே தள்ளிவிடப்பட்டு,  அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று மருத்துவமனையில் உள்ள  டிஸ்சார்ஜ் சம்மரியில் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஜெயலலிதா  தள்ளிவிடப்பட்டார் என்று அதிலே கூறப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைக்கு  ஜெயலலிதா வருவதற்கு முன்பு, அதற்கு அடுத்தாற்போல் போயஸ் கார்டனில் இருந்து  அப்போலோவிற்கு வேனுக்காக ‘1066’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஒருவர்  ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது. அனுப்புங்கள் என்று கூறுகிறார்.

அவர் ஒரு  டி.எஸ்.பி., யார் அந்த டி.எஸ்.பி, அவருடைய பெயர் என்ன? என்று எங்களுக்கு  தெரியாது. ஏகப்பட்ட சந்தேகம்: ஜெயலலிதாவை அழைத்து செல்ல எத்தனை மணிக்கு  ஆம்புலன்ஸ் அப்போலோ மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது. எத்தனை  மணிக்கு போயஸ் கார்டனுக்குள் சென்றது. எத்தனை மணிக்கு அவரை அந்த ஆம்புலன்சில் ஏற்றியது. அப்போது  யார், யார் எல்லாம் கூட வந்தார்கள் என்ற சந்தேகம்  தெளிவாவதற்கு இந்த கேள்வியை கேட்கிறோம். அதற்கு பிறகு அப்போலோ  மருத்துவமனைக்கு ஜெயலலிதா வந்தபோது மணி என்ன? எத்தனை மணிக்கு வந்தார்கள். அதனுடைய  படங்கள் சி.சி.டிவியில் பதிவாகியிருக்கும். ஏன் போயஸ் கார்டனில் சிசிடிவி  இருக்கிறது.

அங்கிருந்து ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும்  வரையிலான சிசிடிவி பதிவுகள் அதில் பதிவாகியிருக்கும். அந்த காட்சிகளை  வெளியிட வேண்டும். பதிவுகளை வெளியிட்டால்தான் ஜெயலலிதா எப்படி அங்கு கொண்டு  செல்லப்பட்டார். எந்த வேனில் வந்தார் என்ற உண்மையான விவரங்களை தெரிந்து  கொள்ள முடியும். 27 சிசிடிவி மாயம்: நாங்கள் கேள்விப்பட்ட இன்னொரு விஷயம் மிகவும் முக்கியமானது. அப்போலோ  மருத்துவமனையில் இருந்த 27 சிசிடிவி கேமராக்கள் ஜெயலலிதா வந்த பிறகு  அகற்றப்பட்டிருக்கிறது. அப்போலோ மருத்துவமனையில் கேமராவை அகற்ற சொல்லி  உத்தரவு போட்டது யார்? அந்த உத்தரவை யார் போட்டார்கள் என்பதை தெரிவிக்க  வேண்டும்.

பதில் வருமா: இதை விட முக்கியம், 2016ம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதாவுக்கு  சிகிச்சை அளித்த பிரபல டாக்டர் சாந்தாராம். அவர் துணைவேந்தராக எம்ஜிஆர்  மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை  அளிக்கும்போது ஒரு கருத்தை சொல்கிறார், ‘நீங்கள் இங்கே பெறுகின்ற, அதாவது  இல்லத்தில் பெறுகின்ற சிகிச்சைகள் ஒரு ஸ்ட்ரோக்கை உங்களுக்கு ஏற்படுத்தும்’  என்று சொன்னார். இதை சொன்ன அடுத்த நாளில் இருந்து போயஸ் கார்டனுக்குள் அவரை  உள்ளே விடவில்லை. அவரை வெளியேற்றி விட்டார்கள். இதற்கும் பதில் சொல்ல  வேண்டும். புரியாத புதிர்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், அப்போலோ  மருத்துவமனை  ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. அந்த பிரமாண  வாக்குமூலத்தில் ஜெயலலிதாவின் ஆயுளின் முடிவை, புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, “ஜெயலலிதாவின் உயிரை எடுப்பதற்கு சிகிச்சையை நிறுத்தி, இயற்கையாக  பிரியும் வகையில் செய்யுங்கள்” என்று சொல்லி உத்தரவு போட்டதாக  கூறப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி அளித்தது யார், அந்த உயிரை எடுக்க  சொன்னது யார், சிகிச்சையை நிறுத்த சொன்னது யார், முடிவை எடுத்த சக்தி யார்,  என்பது புரியாத புதிராக உள்ளது. இதனை குடும்ப உறுப்பினர் அல்லாதவர்  பிறப்பிப்பதற்கு அதிகாரம் உண்டா என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். மத்திய  அரசிடம் ஒன்றை கேட்க வேண்டுகிறேன். சிங்கப்பூர் செல்லாமல் தடுத்தது யார்: மத்திய  அரசாங்கம்  2015 மே, ஜூன் மாதத்தில் ரகசியமாக ஒரு கடிதத்தை அனுப்புகிறது. அதில் சென்னையில் இருந்து  சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல சென்னை  விமான நிலையத்தில் பாரா ஆம்புலன்ஸ் விமானம் வந்து இறங்கியிருக்கிறது என்று  சொல்லியுள்ளது.

ஏன் ஜெயலலிதாவை எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்து  செல்லவில்லை. இதை தடுத்தது யார், இந்த முடிவை எடுத்தது யார்?.
எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்கான மருத்துவ  அறிக்கையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். எய்ம்ஸ் அறிக்கை இதுவரை  வரவில்லை. எனவே இந்த கேள்விக்கு எல்லாம் நாட்டு மக்களுக்கு பதில் கிடைக்க  வேண்டும். நெருங்கி விட்டோம்:
ஜெயலலிதாவுக்கு என்.எஸ்.ஜி.., இசட் பிளஸ் பாதுகாப்பு 1991ல்   மத்திய அரசு வழங்கியது. இசட் பிளஸ் போலீசார் மருத்துவமனைக்கு உள்ளே சென்ற   போது அவர்களை யார் தடுத்தது, யார் அவர்களை வீட்டுக்கு திரும்ப போகச் சொன்னது. என்எஸ்ஜி சட்டத்தின் ஒரு சிறப்பான சட்டப்பிரிவு  என்னவென்றால்  என்.எஸ்.ஜி. பிரிவை சார்ந்தவர்கள் “யாரை பாதுகாக்கிறார்களோ  அவர்களுக்கு  பாதுகாப்பு வழங்க தவறினாலோ, கோழையாக மாறி இடத்தை விட்டு  ஓடினாலோ  அவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும்’’ என்பது சட்டம்.

வேறு  தண்டனை  கிடையாது. அவ்வளவு கடுமையான சட்டம் வழங்கப்பட்டது ஜெயலலிதா போன்ற  தலைவர்களை  பாதுகாப்பதற்காக தான்.
அதனால், தான் சிலரின் குடும்ப  உறுப்பினர்கள்  தாராளமாக அங்கு உலாவிக் கொண்டிருந்தார்கள். குற்றவாளிகளை  நாங்கள் நெருங்கி  விட்டோம். மேலும் விவரங்களை அடுத்த பத்திரிகையாளர்கள்  சந்திப்பில்  தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதா கைநாட்டு வாங்கியது யார்?
முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் அளித்த பேட்டி: முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது பலவிதமான  சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. இகோமா சிகிச்சை அளிக்கப்பட்டது. இகோமோ  சிகிச்சைக்கு அனுமதி கொடுத்தது யார்?. மேலும் ஒரு பத்திரிகையார்கள்  சந்திப்பில் ஜெயலலிதா “இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார்” என்று  செய்திகள் வந்தது. இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவருக்கு  கொடுக்கப்படும் உணவு வகைகள் அனைத்தும் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு பிறகே  தரப்பட வேண்டும். அப்படி ஆய்வுக்கு சென்று கொடுக்கப்பட்ட உணவின் அறிக்கையை  வெளியிட வேண்டும். ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போது நவம்பர்  2ம் தேதியில் இருந்து டிசம்பர் 5ம் தேதி வரை வெளிநாட்டு டாக்டர்களான  ரிச்சர்ட் பிலே மற்றும் எந்த டாக்டர்களும் வரவில்லை? அதற்கு காரணம் என்ன?.

ஜெயலலிதாவுக்கு  சிகிச்சை அளிக்க அனைத்து டாக்டர்களும் வந்தார்கள். ஜெயலலிதாவை  பார்த்தார்கள். சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு  ஆங்கிலம் தெரியும். ஜெயலலிதாவின் அருகில் இருந்தவர்களுக்கோ ஆங்கிலம்  தெரியாது. தமிழோ டாக்டர்களுக்கு ெதரியாது. அப்படியிருக்கும் சூழ்நிலை  அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை அறிந்து அனுமதி கொடுத்தது  யார்?. ஜெயலலிதாவின் முகத்தில் கன்னத்தில் 4 ஓட்டைகள் இருந்தது.  அந்த ஓட்டைகளுக்கு அவர்கள் கொடுத்த விளக்கம். அது பிளாஸ்டரிங் ஒட்டப்பட்டு,  அதனால் ஸ்கின் பீளிங் ஏற்பட்டுள்ளது என்று சொன்னார்கள். எம்பாமிங் செய்த  டாக்டரோ நாங்கள் அதை பார்க்கவில்லை என்று சொன்னார்கள். அப்படியிருக்கும்  நிலையில் இன்று வரை அவர் முகத்தில் உள்ள 4 ஓட்டைக்கு என்ன காரணம் என்பதை  யாரும் வெளிக்கொண்டுவரவில்லை.

ஜெயலலிதாவை பார்க்க கவர்னர், மத்திய  அமைச்சர்கள் வந்தனர். இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள ஒருவரை பார்க்க வரும்  போது வருகை புத்தகத்தில் பதிவு செய்வது வழக்கம். அப்படி யார், யார்  வந்தார்கள், எந்தெந்த வாகனம் உள்ளே வந்தது. அம்மாவால் விலக்கி  வைக்கப்பட்டவர்கள் வந்தார்களா? என்ற அனைத்து விவரங்களும் இருக்கும். அந்த  விவர புத்தகத்தை அரசு வெளியிட வேண்டும். ஜெயலலிதாவுக்கு இகோமா  உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்கும் வழங்கப்பட்டது. சிகிச்சைகளுக்கு  குடும்ப உறுப்பினர்கள் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அப்போலோ  மருத்துவமனையில் குடும்ப உறுப்பினர்கள் என்பதை எடுத்து சொல்வதற்கும், அதனை  உறுதி செய்வதற்கும் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் என்ன? என்பதை வெளியிட வேண்டும்.

முக்கியமான விசயம், ஜெயலலிதா சம்பந்தமாக எழுப்பப்பட்ட சந்தேகங்கள்  அடிப்படையிலும், பெறப்பட்ட செய்திகள் அடிப்டையில் அவர் டிசம்பர் 4ம் தேதி  மாலை 4.30 மணிக்கு இறந்துள்ளார். மாலை 4.30 மணிக்கு இறந்த பிறகு, இரவு 9.30  மணியளவில் இருந்து அந்த இக்மோ பொருத்தப்பட்டு, அடுத்த நாள் 5ம் தேதி இரவு  9.30 மணி வரை 24 மணி நேரம் இருந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.  அப்படி சொல்லும் விவரங்களுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. அதை நாட்டு  மக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக சட்டப்ேபரவை இடைத்தேர்தல்  நடைபெற்ற போது அப்போது “ஏ” பார்ம், “பி” பார்ம் கொடுக்கப்பட்டது.

அம்மாவின்  கையை எடுத்து கைநாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது அங்கிருந்த டாக்டர்  பாலாஜி விசாரிக்கப்பட வேண்டும். விசாரிக்கப்பட்டால் தான் மேற்கொண்டு  என்னென்ன கையெழுத்து வாங்கப்பட்டது என்று நாட்டுமக்களுக்கு தெரியவரும்.  அப்போலோ என்ற மருத்துவமனை தரமுள்ள மருத்துவமனை, சர்வதேச தரச்சான்று பெற்ற  மருத்துவமனை. பிசியோ தெரபிஸ்ட் சிகிச்சையில் சான்று பெற்றது.  அப்படியிருக்கும் போது ஏன்? சிங்கப்பூரில் இருந்து பிசியோ தெரபிஸ்ட்  டாக்டர்கள் வரவழைக்கப்பட வேண்டும். அதற்கு அனுமதி அளித்தது யார்?. எதற்காக  இது செய்யப்பட்டது என்பதை நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.