வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நாம் கடந்த 13ஆம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற கொடுமையான ரசாயன விஷப்பவுடரை வீசி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இக்கொலை தொடர்பாக இந்தோனேசியா மற்றும் வியட்நாமை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடகொரிய மக்களுக்கான விசா இல்லாத பயணச் சலுகையை மலேசிய அரசு ரத்து செய்துள்ளது.
கிம் ஜாங்-நாம் கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் பல வடகொரியர்களை மலேசிய காவல்துறை தேடி வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசா சலுகை ரத்து நடவடிக்கையானது மார்ச் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும், அதன்பின்னர் வடகொரிய மக்கள் மலேசியாவுக்கு வருவதற்கு விசா பெற வேண்டும் என்றும் மலேசிய துணை பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமீதி அறிவித்திருப்பதை மேற்கோள் காட்டி தேசிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கிம் ஜாங்-நாம் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, வடகொரியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது.
இருதரப்பு வர்த்தகம் மட்டுமின்றி இரு நாட்டு மக்களும் பரஸ்பரம் விசா இன்றி பயணம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

