40 வருடங்கள் அணைக்கமுடியாமல் எரியும் மீத்தேன் கிணறு… உண்மையை மறைத்து தமிழகத்தை அழிக்க சதி

355 0

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியதையடுத்து நெடுவாசல் போராட்டக்களமாக மாறி வருகிறது.

நெடுவாசல் கிராமம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் விவசாய கிராமம் ஆகும். புதுக்கோட்டை தனி மாவட்டமாக பிரிக்கப்படும் முன்பு தஞ்சை மாவட்டத்தில் இந்த கிராமம் இருந்தது. இதனால் காவிரி தண்ணீர் பாய்ந்து செழிப்பாக காணப்பட்டது. இங்கு காவிரி நீர்மட்டுமின்றி ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தும் இங்கு விவசாயம் செய்யப்படுகிறது.

இவ்வாறு செழிப்பான கிராமம்தான் தற்போது போராட்டகளமாக மாறியுள்ளது. அதற்கு காரணம் டெல்லியில் கூடிய மத்திய மந்திரி சபை இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது தான். அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ள ஒரே கிராமம் நெடுவாசல் தான்.

ராட்சத ஆழ்குழாய் கிணறு

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வடகாடு கிராமத்திற்குள் நுழைந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனம், வடகாடு கல்லிக்கொல்லை என்ற இடத்தில் மாணிக்கவாசகம் மற்றும் சில விவசாயிகளை அணுகி எண்ணெய் வளம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். உங்கள் நிலத்தில் ஒரு ஆழ்குழாய் கிணறு மட்டும் அமைத்து சோதனை செய்ய வேண்டும். அதற்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.65 ஆயிரம் குத்தகை தருகிறோம் என்று பேசி ஒப்பந்தம் போட்டது. விவசாயிகளும் சரி என்றனர்.

அதன் பின்னர் புதிய மெட்டல் சாலை அமைக்கப்பட்டு திடீர் குடில்கள் அமைத்து தங்கி இருந்து, ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து 100 மீட்டர் தூரத்தில் பெரிய தொட்டிகள் கட்டினார்கள். பல மாதங்களுக்கு பிறகு இரும்பு குழாய்களை ஆழ்குழாய் கிணற்றுக்குள் இறக்கி, கான்கிரீ்ட் போட்டு, அதன் மேலே இரும்பு குழாய்களை பொருத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில் இருந்து வெளிவந்த எரிவாயுவை ஆழ்குழாய் கிணற்றில் இருந்து வெளியேறிவிடாமல் இரும்பு அடைப்புகளை வைத்து அடைத்தனர்.

2008 -2009-ல் சோதனை

பின்னர் வாணக்கன்காடு, கோட்டைக்காடு, புள்ளான்விடுதி என்ற வரிசையில் 2008- 2009-ம் ஆண்டு நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளிகளான குழந்தை வேளார், கோவிந்த வேளார் என்ற சகோதரர்களுக்கு சொந்தமான நல்லாண்டார்கொல்லை பகுதியில் உள்ள விளைநிலத்திற்கு குத்தகை ஒப்பந்தம் போட்டனர்.

2 ஆண்டுகள் வரை சுமார் 4,500 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து சோதனையில் ஈடுபட்டு, கடைசியில் பல நாட்கள் எரிவாயு மற்றும் எண்ணெய் எடுத்து பார்த்தனர். எண்ணெய் கழிவுகளை அருகில் ஒரு தொட்டி அமைத்து கொட்டி வைத்தனர். 10 லாரிகளில் எண்ணெயை கொண்டு சென்றனர். வழக்கம்போல அதில் இருந்து எண்ணெய், எரிவாயு வெளியேறிவிடாமல் இரும்பு குழாய்களை அடைத்துவிட்டு சென்றவர்கள், குத்தகை பணம் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் தான் கடந்த 15-ந்தேதி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க கர்நாடகாவை சேர்ந்த ஜெம் என்ற தனியார் நிறுவனத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு பிறகு தான் போராட்டக்களமாக மாறியுள்ளது நெடுவாசல்.

ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு

ஹைட்ரோ கார்பன் என்பது மண்ணுக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஒரு வகையான இயற்கை எரிவாயு என்கிறது ஓ.என்.ஜி.சி. நிறுவனம். ஆனால் 15 ஆண்டுகளாக குவைத் நாட்டில் எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்யும் நெடுவாசலை சேர்ந்த சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இது மீத்தேன் திட்டம் தான். மீத்தேன், ஈத்தேன், புரப்பேன், புயூட்டேன், பென்டேன் ஆகியவற்றின் பொதுப்பெயர் தான் ஹைட்ரோ கார்பன்.

இந்த திட்டம் செயல்படுத்த பல ஆயிரம் மீட்டர் வரை நேராகவோ அல்லது பக்கவாட்டிலோ ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் இருந்து ஏராளமான எண்ணெய், நல்லதண்ணீர் எல்லாம் எடுப்பார்கள். அதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே போகும். சவுதி அரேபியா, குவைத், ஈராக் போன்ற நாடுகளில் எண்ணெயும், கத்தார் போன்ற நாடுகளில் எரிவாயுவும் கிடைக்கிறது. இது போன்ற திட்டங்களை கடற்கரை ஓரத்தில் மக்கள் வாழாத இடங்களில் தான் செயல்படுத்த வேண்டும். இவற்றை சுத்திகரிக்க அதிகமான தண்ணீர் தேவைப்படும். அதற்கு கடல் நீரை பயன்படுத்தலாம்.

மக்களை பாதிக்கும்

தற்போது நெடுவாசலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தம் கர்நாடக நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு இந்த எண்ணெய், எரிவாயுவை எடுக்கும் போது, அதில் இருந்து நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் வெளியேறும். இந்த நச்சு வாயுக்கள் மக்களை பாதிக்கும். அதனால் பொதுமக்கள் வாழும் இடங்களில் இந்த திட்டம் அனுமதிக்க கூடாத திட்டம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகளோ, பொதுமக்கள் அச்சப்படத் தேவை இல்லை. இத்திட்டம் யாரையும் பாதிக்காது. விவசாயம் பாதிக்காது. ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் குறையாது என்கிறார்கள்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ஓ.என்.ஜி.சி.யை சேர்ந்தவர்கள் வந்து ஆழ்குழாய் கிணறு போட்டபோது பாதிப்பு இருக்காது என்று கூறினார்கள். அப்போது எங்களுக்கு விவரம் தெரியாது. பின்னர் எதுவும் கூறாமல் சென்று விட்டனர். ஆனால் தற்போது எண்ணெய், எரிவாயு எடுக்கிறோம் என்று வரும்போது தான் பகீர் என்று உள்ளது. இதனால் சுற்றியுள்ள 50 கிராமங்களை பாதிக்கும் என்று கூறுகிறார்கள். குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது என்று சொல்கிறார்கள். விவசாயம் செய்து பிழைக்கிற நாங்கள் எங்கே போவது. அதனால் மத்திய அரசு இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும், என்றார்.

அதிகாரிகள் சிறைபிடிப்பு

இந்தநிலையில் தான் இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். இது சம்பந்தமாக ஆய்வுக்கு வந்த வருவாய் துறை அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள், அவர்களை நில ஆய்வுக்கு உள்ளே விடாமல் திருப்பி அனுப்பினார்கள். கடந்த 21-ந்தேதி நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க தயாராக உள்ள இடத்தை பார்வையிட வந்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளையும், வாகனங்களையும் சிறைபிடித்த மக்கள் எரிவாயு எடுக்க வரக்கூடாது, என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர்.

ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வாடிவாசலை காத்ததுபோல், நெடுவாசலையும் காப்போம் என்று கல்லூரி மாணவர்கள் முதல் இளைஞர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

40 வருடங்கள் அணைக்கமுடியாமல் எரியும் மீத்தேன் கிணறு

40 வருடங்களுக்கு முன்னர் துர்க்மெகிஸ்தானில் ஒரு பாலைவனத்தின் நடுவே மீத்தேன் கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது. அப்போது அந்த கிணற்றிலே ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்துக் காரணமாக ஏற்பட்ட தீ இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.

அரசாங்கம் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அதனை அணைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆக அப்படியான ஒரு தீ தமிழகத்திலோ வேறு இவர்கள் குறிப்பிட்டிருக்கும் இடங்களிலோ ஏற்பட்டால் மொத்த தமிழகமே அழிந்து விடும்.