ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது பயந்து நடுங்கியவர்கள் இப்போது ஆட்டம் போடுகிறார்கள்: அன்பழகன்

259 0

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, பயந்து நடுங்கிய நம்முடைய எதிரிகள் இன்று ஆட் டம் போடுகின்றனர் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார். புதுவையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, பயந்து நடுங்கிய நம்முடைய எதிரிகள் இன்று ஆட் டம் போடுகின்றனர். அம்மாவால் அமைக்கப்பட்ட தமிழக அரசை கலைக்க தி.மு.க., காங்கிரஸ் செய்த அத்தனை சதி செயல்களையும் முறியடித்து மீண்டும் அம்மா ஆட்சியை நிலை நிறுத்திய பெருமை சசிகலாவையே சாரும்.

தமிழக ஆட்சியையும, கழகத்தையும் சீர்குலைக்க தி.மு.க.வின் ஸ்டாலின் பல்வேறு ஓரங்க நாடகங்களை தினந்தோறும் நடத்தி வருகிறார்.சட்டமன்றத்தில் தி.மு. க.வின் நாடகத்தை மக்கள் அனைவரும் அருவருப்புடன் பார்த்தார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு கவர்னரின் உத்தரவுப்படி ஜனநாயக ரீதியில் நடத்தப்பட்டது.

அதன் பிறகும், ஜனாதிபதி சந்திப்பு, சோனியாகாந்தி சந்திப்பு, நீதிமன்ற வழக்கு என ஸ்டாலின் அ.தி.மு.க.வின் ஆட்சியை கவிழ்க்க ஆலாய் பறக்கிறார். தி.மு.க.வின் சதி செயலை முறியடித்து இந்த சோதனையான காலக்கட்டத்தில் கழகத்தையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள ஒருசிலர் அதனை மறந்து செயல் படுவது தவறான ஒன்றாகும்.

நீட் தேர்வு சம்பந்தமாக மாணவர்களின் நலன் காக்க தமிழக முதல்-அமைச்சர் பிரதமரை சந்திக்கிறார்.ஆனால், புதுவை முதல்வரோ கவர்னரை மாற்ற ஜனாதிபதியையும், மத்திய உள்துறை மந்திரியையும் சந்திக்கிறார். ஜல்லிக்கட்டுக்கு தனி சட்டம் கொண்டு வந்து தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டப்படி ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஆனால், புதுவையில் அதற்காக போராடிய மாணவர்களையும், பல்வேறு அமைப்புகளையும் ஏமாற்றியதுதான் மிச்சம்.

ஜெயலலிதா மறைவு குறித்து பல்வேறு குந்தகங்களை தற்போது கூறுபவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம், யாரை முன்னிறுத்தி செல்கிறோம் என்று புரியாமல் பேசுகிறார்கள்.இப்போது சி.பி.ஐ. விசாரணை எதற்காக கேட்கிறார்கள்? அம்மாவின் சமாதியை தோண்டி மறு பிரேத பரிசோதனை கேட்பது நியாயமான செயலா? என்பதை உணராமல் பேசுகிறார்கள்.

அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அம்மாவால் வளர்க்கப்பட்ட இயக்கம். இரட்டை இலை, கட்சி கொடி, இவைதான் அ.தி. மு.க. தொண்டர்களின் உயிர்மூச்சு. கழகத்தின் மூலம் வளர்ந்த ஒரு சிலர் தங்களது அறியாமையால் தவறான பாதையை தேர்ந்து எடுத்துள்ளனர். அவர்கள் தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும். இரட்டை இலைக்கும், கழகத்துக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு உண்மையான தொண்டனின் பொறுப்பாகும்.இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.